காப்பான் படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

0 467

காப்பான் படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அத்திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள  திரைப்படம் காப்பான்.

இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என கூறி சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை  தனி நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்த போது, மனுதாரர் சார்லஸ் தரப்பில் 2016 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம்  தெரிவித்தாக கூறியிருந்தார். அந்த கதையை வைத்து 'காப்பான்' படத்தை எடுத்திருப்பதால், படத்திற்கு தடைவிதிப்பதோடு, தனக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் சார்லஸை தனக்கு தெரியாது என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் தரப்பிலும்,  விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தரப்பிலும் வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மனுதாரர் தொடர்ந்த மேல்முறையீடு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கதை தொடர்பான விவகாரத்தில் இரண்டு பேரின் கதைகளையும் ஒப்பிட்டுபார்க்காமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அந்த தீர்ப்பை  ரத்து செய்துவிட்டு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், காப்பான் படத்திற்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments