சிதம்பரத்துக்கு மீண்டும் திகார்

0 789

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

2007ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டைப் பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உதவியதாக புகார் கூறப்பட்டது.

அனுமதிக்கப்பட்டதை விட அதிக முதலீட்டைப் பெற்றுக் கொடுக்க உதவியதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தன. இந்த வழக்கில், கடந்த மாதம் 21ஆம் தேதி இரவில், சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

அவரைக் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை முடீந்து, செப்டம்பர் 5ஆம் தேதி அன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதபரத்தின் காவல், வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்குமாறு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் சிபிஐ கோரிக்கை வைத்தது. அதற்கு, சிதம்பரத்தின் வழக்கறிஞரான கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார்.

சிதம்பரத்துக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இருப்பினும் கபில் சிபலின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் காரணமாக, ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வழக்கு விசாரணைக்கு இடையே நீதிபதியிடம் முறையிட்ட ப.சிதம்பரம், தனது அறையில் இருக்கை மற்றும் தலையணை இல்லாத காரணத்தால், தனக்கு முதுகு வலி அதிகமாகி விட்டதாகத் தெரிவித்தார்.

அறைக்கு வெளியே சில இருக்கைகள் இருந்ததாகவும், அவற்றில் தாம் அமர்ந்த காரணத்தால், அவற்றையும் அகற்றி விட்டதாகவும் சிதம்பரம் குற்றம்சாட்டினார். சிறைக் காவலர்களுக்குக் கூட தற்போது இருக்கை இல்லை என்றும் சிதம்பரம் புகார் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, இது ஒரு சிறிய பிரச்சனை என்று குறிப்பிட்டார். ஆரம்பத்தில் இருந்தே சிதம்பரத்தின் அறையில் இருக்கை இல்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments