நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..

0 554

சுங்கக் கட்டணம் உயர்வு, போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு போன்றவற்றைக் கண்டித்து, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு முன்பைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டது. இதற்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வையும் கண்டித்துள்ள அந்த அமைப்பு லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்று நாடு முழுவதும் 45 லட்சம் லாரி உரிமையாளர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நாமக்கல்

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 36 ஆயிரம் சரக்கு லாரிகள் ஓடவில்லை. இதனால் 5 கோடி ரூபாய் அளவுக்கு சரக்குகள் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

கரூர் 

காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு கரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் 1800 லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் கொசுவலை துணி, ஜவுளி, காகிதங்கள், சர்க்கரை, வாழைக்காய் உள்ளிட்ட பொருட்கள் தேங்கியுள்ளன. தேங்கியுள்ள பொருட்களின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

புதுச்சேரி

புதுச்சேரியிலும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள  புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், 1000க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 30,000 லாரிகள் ஈடுபட்டுள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக 15 கோடி ரூபாய் அளவிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு வாடகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ரயில்களில் கொண்டுவரப்படும் சிமெண்ட் மற்றும் அரிசி ஆகியவை இன்று காலை முதல் லாரிகளில் ஏற்றி வெளியே எடுத்து செல்லப்படவில்லை. சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவ்வரிசி, தேங்காய் போன்ற பொருட்கள் தேங்கியுள்ளன.

கோவை 

கோவை மாவட்டத்தில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சீருடை அணியாமல் லாரிகளை இயக்கினால் கூட 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கேரளா உள்பட வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் இயக்கப்படாததால் பொருட்கள் தேக்கமடைந்தன.

தூத்துக்குடி

லாரிகள் வேலைநிறுத்தத்தால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியூர் உள்ளூர் லாரிகள் என 2500 லாரிகள் இன்று இயக்கப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக புதிய மோட்டர் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments