தூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..! கொலையை தடுக்க தீவிரம்

0 1109

தூத்துக்குடியில் அடுத்தடுத்து கொலை சம்பவங்களில் ஈடுபட்ட கொலையாளிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பியபோது வழுக்கி விழுந்து கைகால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மூன்றே மதங்களில் 19 கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததால் காவல்துறையினர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலனின் நேரடி கண்காணிப்பில் 24 மணி நேர வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு உரிய நபர்களை பட்டியலிட்டு கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், சிவந்தாகுளம் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை எச்சரித்த கப்பல் பொறியாளர் முருகேசனையும், அவரது நண்பர் விவேக்கையும் கொடூரமாக வெட்டி கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்த நிலையில் அருகில் நின்ற இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு போலீசாரிடம் இருந்து அதிவேகத்தில் தப்பிச்செல்ல முயன்ற போது இருசக்கரவாகனம் சறுக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் சாலையில் வழுக்கி விழுந்த மாரிமுத்து, அருண், மாரிசெல்வம் ஆகிய 3 பேருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்ட காவல்துறையினர் மனித நேயத்துடன் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கையில் அரிவாள் ஏந்திய முக்கிய கொலையாளிகள் 3 பேருக்கும் கை மற்றும் கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டது. கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வருவதாகவும் குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிக்காமல் இருக்க தேவையான ஆதாரங்களை திரட்டி அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதே போல மணல் கடத்தல், நிலத்தடி நீர் திருட்டு, 24 மணி நேர டாஸ்மாக் விற்பனையையும் தடுக்க காவல்துறையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments