நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் சிக்கிய அரசு டாக்டர் வாரிசு..!

0 1014

சூல் ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்த நபர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவர் மகனின் ஆள்மாறாட்ட மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் தண்டையார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்.

இவரது மகன் உதித் சூர்யா. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாமல் தவித்த உதித் சூர்யா 3 வது முறை இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை மராட்டிய மாநிலம் மும்பையில் எழுதியதாக கூறப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 385 மதிப்பெண் பெற்றதாக கூறப்பட்ட உதித்சூர்யா, ஆதிதிராவிடர் இடஒதுக்கீட்டின் படி கவுன்சிலிங் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சென்று மாணவன் உதித்சூர்யா தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஆகஸ்ட் முதல்வாரத்தில் தொடங்கிய மருத்துவ படிப்பிற்கு 40 நாட்களுக்கும் மேலாக கல்லூரிக்கு சென்று வந்த சூர்யாவிற்கு அசோக் என்ற பெயரில் வந்த மெயிலால் சிக்கல் வந்தது.

உதித்சூர்யா என்ற பெயரில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பது போலியான நபர் என்றும் தேர்வு எழுதி, கவுன்சிலிங்கில் பங்கு பெற்றவர் வேறு நபர் என்று தற்போது கல்லூரியில் படித்து வருபவர் வேறு நபர் என்றும் அந்த மெயிலில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாணவன் உதித் சூர்யாவை அழைத்து அங்குள்ள அவரது ஆவணங்களை சரிபார்த்த போது நீட் தேர்வு எழுதிய ஹால்டிக்கெட்டில் இருந்த போட்டோவும், மாணவரின் தற்போதைய தோற்றமும் வேறாக இருந்தது.

இது குறித்து கடந்த 9 ந்தேதி நடந்த விசாரணையில் கேட்ட போது முறையான பதில் அளிக்காமல் கல்லூரியில் இருந்து வெளியேறிய உதித் சூர்யா மன அழுத்தம் காரணமாக மருத்துவ படிப்பில் இருந்து விலகிக்கொள்வதாக மருத்துவ கல்வி இயக்குனகரகத்திற்கு கடிதம் அனுப்பி விட்டு சென்னை திரும்பியுள்ளான்.

முன்னதாக ஆவணங்களில் உள்ள புகைப்படத்திற்கும் சேர்க்கைக்கு வந்த மாணவன் உதித் சூர்யாவின் தோற்றத்திற்கும் வேறுபாடு இருப்பதாக அதிகாரிகள் தேனி மருத்துவக் கல்லூரி டீனிடம் கூறியதாகவும், தற்போது சேர்த்துக் கொள்ளுங்கள் பின்னர் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம், என்று டீன் கூறியதால் உதித்சூர்யா தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கல்லூரி டீன் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்கிற விவகாரம் சர்ச்சையானதால், இதனை தொடர்ந்து மாணவரையும், அவரது தந்தையையும் அழைத்து மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் ஒப்புக்கு விசாரணை நடத்தி அனுப்பிவைத்ததாக சொல்லப்படுகிறது.

மாணவன் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும், தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனும் நண்பர்கள் என்றும் அதனால் தான் அவரது சேர்க்கையில் சந்தேகம் எழுந்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

சர்ச்சை பூதாகரமானதால் 9 நாட்கள் கழித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன், உதித் சூர்யா மீது புதன்கிழமை கானா விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதித் சூர்யா மீது ஆள்மாறட்டம், கூட்டுசதி, மோசடி ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே அந்த மாணவனே மருத்துவ கல்லூரியில் இருந்து விலகிகொள்வதாக எழுதி கொடுத்துச்சென்றுவிட்ட நிலையில் விசாரணையின் முடிவில் அவன் ஆள்மாறட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டால் மாணவனை கல்லூரியில் இருந்து விலக்குவோம் என்று மருத்துவகல்வி இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்

பயிற்சி பெற போதிய வசதி இல்லாததால் ,நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் ஏழை மாணவ மாணவிகள் மருத்துவ கனவை அடையமுடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில், தன்னிடம் உள்ள பணத்தை அள்ளிக்கொடுத்து மோசடியாக தன் மகனை மருத்துவராக்க முயன்றதாக கூறப்படும் அரசு மருத்துவர் வெங்கடேசன் மற்றும் அவரது மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இதனிடையே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை கைது செய்ய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை இருவரையும் பிடிக்க விரைந்துள்ளதாக தேனி மாவட்ட காவல் காண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments