ஜப்பானில் நாட்டையே உலுக்கிய 5 வயது சிறுமி மரண வழக்கு

ஜப்பானில் நாட்டையே உலுக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி தாய்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யூரி ஃபுனாடோ என்ற 27 வயது பெண், தமது 2-வது கணவர் மூலம் 2016-ல் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்த குழந்தை பிறந்தது முதல் முதல் கணவருக்குப் பிறந்த யுவா என்ற மகளை சரிவர கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மகனை கவனிப்பதற்காக 5 வயது மகளை வீட்டில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்ததாகவும், 12 கிலோ எடையில் இருந்த மகள் யுவா, 2 மாதங்களாக இருவேளைக்கு சூப் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டதால் 4 கிலோ உடல் எடை குறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அத்துடன் யுவா தனது வளர்ப்புத் தந்தை யுடாயால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 5 வயதே ஆன யுவாவுக்கு நிமோனியா காய்ச்சல் வந்தும் அவளை கண்டுகொள்ளாமல் விட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
ஓரிரு நாட்களில் யுவா பரிதாபமாக உயிரிழந்துவிட, அவரது டைரியில் பெற்றோரிடம் தன்னை மன்னிக்குமாறு மிகவும் கெஞ்சியும், இனிமேல் இருவரும் சொல்லாமலேயே அனைத்து வேலைகளையும் தானே செய்வேன் என்றும் சிறுமி உருக்கமாக எழுதியிருந்தார்.
இந்த டைரிக்குறிப்பு வெளியாகி ஜப்பானில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக பெரும் அதிர்வலை ஏற்பட்டது. குழந்தைகள் வன்கொடுமையைத் தடுக்க சிறப்புத் தீர்மானங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்த வழக்கில் தன் வளர்ப்புக் கணவன் தான் அவ்வப்போது பைத்தியம் பிடித்தது போல் தாக்கியதாகவும், அதில் தானும் பாதிக்கப்பட்டவள் என்பதால் தாக்குதலைத் தடுக்க தனக்கு சக்தியில்லாமல் போனதாகவும் 2-வது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் தாயின் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், ஒரு தாயாக தன் மகளை கவனிக்கத் தவறியதோடு, மகளை விட கணவனே பெரிது என நினைத்திருந்த யூரியின் அலட்சியத்தால் மகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி, 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ப்புத் தந்தை மீதான வழக்கு அக்டோபர் 1-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Comments