இங்கிலாந்து நாடாளுமன்ற முடக்கத்தை எதிர்த்த வழக்கு மீது விசாரணை தொடக்கம்

0 154

இங்கிலாந்து நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கி வைத்திருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மீது அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற போரிஸ் ஜான்சன் மேற்கொண்ட முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தை அக்டோபர் 14ஆம் தேதி வரை போரிஸ் ஜான்சன் முடக்கி வைத்தார்.

இதை எதிர்த்து, லண்டனிலுள்ள அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 3 நாள்கள் விசாரணையை நேற்று தொடங்கியது.

அப்போது தலைமை நீதிபதி பிரென்டா ஹாலே (Brenda Hale), ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நீதிமன்றங்கள் ஏற்கெனவே மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருப்பதால், இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலை உச்சநீதிமன்றத்துக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார்.  மேலும் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்றும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, நீதிமன்றத்துக்கு வெளியே பிரெக்ஸிட் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் நாளை வரை விசாரணை நடைபெறுகிறது.

எனினும் நீதிபதிகளின் தீர்ப்பு வெளியாக காலதாமதம் ஆகும் எனத் தெரிகிறது. நீதிபதிகளின் தீர்ப்பு அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்ற நடைமுறை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சனின் நடவடிக்கை சரியானதுதான் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தால், நாடாளுமன்றம் அக்டோபர் 14ஆம் தேதிதான் மீண்டும் கூடும்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments