சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல்..! நாளை மறுநாள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

0 211

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான 50 வேட்பாளர்களின் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாலாசாஹிப் தோரட் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக  சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில், இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் சிவசேனா தனித்து போட்டியிட தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டது.

அதன்படி 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை தொகுதிகளில், காங்கிரஸ் 125 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 125 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் மீதமுள்ள 38 தொகுதிகள் பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்திருந்தார். அதேபோல் இந்த முறை பல புதுமுக வேட்பாளர்களை களமிறக்கப்போவதாகவும் சரத்பவார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான முதல் 50 வேட்பாளர்களின் பெயர்கள் வருகிற 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹிப் தோரட் அறிவித்துள்ளார்.

பாஜக, சிவசேனாவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தற்போதுவரை முழுமுடிவு எட்டப்படாத நிலையில், காங்கிரஸ் கட்சி, தங்களது வேட்பாளர்களின் பெயர்களை முடிவு செய்து தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments