சுற்று வட்டச் சாலை - கடனுதவிக்கு ஒப்புதல்

0 582

தச்சூரையும், ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சுற்றுவட்டச் சாலைத் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஒபெக் சர்வதேச மேம்பாட்டு நிதியத்திடம் இருந்து 3,400 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் தச்சூரையும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் வகையில் 57 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுச் சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தையும், கொல்கத்தா, திருப்பதி, பெங்களூரு நகரங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது.

இந்த திட்டத்திற்கு 5 ஆயிரத்து 913 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. எனவே, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்தும், ஒபெக் சர்வதேச மேம்பாட்டு நிதியத்திடம் இருந்தும் கடன் பெற தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கு அனுமதி கேட்டு மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுவை தமிழக அரசு நாடியது. தமிழக அரசின் முன்மொழிவை ஆராய்ந்த அந்தக் குழுவானது 3,400 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இதை அடுத்து, அடுத்த மாதத்தில் அந்த இரு வங்கிகளையும் தமிழக அரசு நாடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத் தேவைகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை மனதில் வைத்தே இத்திட்டம் உருவாகியுள்ளதாக அரசு கூறியுள்ளது.

பயண நேரம், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுஒருபுறமிருக்க, எண்ணூர் துறைமுகத்தையும் தச்சூரையும் இணைக்கும் வகையில் 24.52 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. ரேடியோ அலைவரிசை உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் கொண்டு வரப்படவுள்ளது. சாலைக்காக 395.71 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. சாலைக்கு தேவையான 50 விழுக்காடு நிலங்களை அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments