விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ டிவிட்..!

0 1357

விக்ரம் லேண்டருடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் இஸ்ரோவின் முயற்சி கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்திய மக்களின் பேராதரவுக்கு இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 விண்கலம் நிலவை நோக்கி கடந்த 7ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் மூன்லேண்டர் கலன் நிலவை இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும்போது தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என ஆறுதல் கூறி அவர்களின் முயற்சிகளைப் பாராட்டி பேசினார்.

தொடர்ந்து ஆர்பிட்டர் மூலமாக விக்ரம் லேண்டரைத் தேடி வந்தது இஸ்ரோ. நிலவின் மேற்பரப்பில் செயலிழந்த விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த சந்திரயான் -2 மிஷன் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இஸ்ரோவுடன் சேர்ந்து நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறது.

விக்ரமுடன் தொடர்பு கொள்ள 14 நாட்கள் கெடு இருந்த நிலையில் பத்து நாட்களை கடந்தும் இதுவரை எந்த வித முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டரை நிரந்தரமாகவே இழக்கக் கூடிய தருணம் நெருங்கிவிட்டது.

இந்நிலையில் இஸ்ரோ விடுத்த டிவிட்டர் செய்தியில் தங்கள் இழப்பிலும் துணை நின்ற இந்திய மக்களின்ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் இஸ்ரோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments