3000 ஆண்டுகள் பழமையான கல் நங்கூரம் கண்டுபிடிப்பு..! டூரிஸ்ட் ஸ்பாட்டான தாமிரபரணி

0 434

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு தாமிரபரணி ஆற்றில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர்கால கல் நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் வருகையால் வறண்ட தாமிரபரணி திடீர் சுற்றுலா தளமாக மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதற்கு அடையாளமாக ஆயிரம் சான்றுகள் உள்ளன. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு தாமிரபரணி ஆற்றில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் கால கோவில் மண்டபம் கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கி கிடந்த இந்த பொக்கிஷங்கள், தண்ணீர் வற்றியதால் மக்கள் பார்வைக்கு கிடைத்துள்ளன. ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் மண்டபத்தின் கலை நயம் மிக்க கல்தூண்களை கண்டு எடுத்தனர்.

பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்தது என்பதற்கு சான்றாக இங்கு 3000 ஆண்டுகள் பழமையான கல் நங்கூரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரும்பினால் ஆன நங்கூரங்கள் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த காலத்தில் கொற்கை துறைமுகத்திற்கு வருகின்ற தோணிகளில் கல் நங்கூரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

இதனை அறிந்து ஆத்தூரில் இருந்து ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கூட மாணவர்களும், பண்டைய தமிழர் நாகரீகத்தை நேரடியாக அரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வறண்ட தாமிரபரணிக்கு மாணவர்களை அழைத்து வந்து சுட்டிக்காட்டி விளக்கி கூறினர்.

மாணவர்கள் ஒரு புறம் என்றால் அருகில் உள்ள முக்காணி, வாழவல்லான், புன்னகாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தினரையும் அழைத்து வந்து வரலாற்று பொக்கிஷங்களை சுற்றிக் காட்டி அழைத்து செல்கின்றனர்.

இன்னும் சில தினங்களில் தாமிரபரணியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் அதற்குள்ளாக பண்டைய பாண்டியமன்னர்களின் வரலாற்று பொக்கிஷங்களை அகழ்வாராய்ச்சி செய்து விரைவாக சேகரிக்க வேண்டும் என்று அங்கு வரும் மக்கள் தெரிவித்தனர்.

விரைந்து அகழ்வாராய்ச்சி செய்தால், தமிழனின் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தாமிரபரணி நாகரீகம் வரலாற்று ஆவணமாகும்.. செய்வார்களா தொல்பொருள் துறையினர்..! என்பதே தமிழர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments