ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 6 குடும்பங்கள் ?

0 327

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊர்க்கட்டுப்பாட்டை மீறி நிலம் வாங்கியதாக 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை கிராமத்தினர் ஒதுக்கிவைத்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நற்கலைகோட்டை கிராமத்தை சேர்ந்த முத்தால்ராஜ் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு 7 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். ஏற்கனவே அந்த நிலத்தை ஊர் பயன்பாட்டிற்காக வாங்குவதற்கு பஞ்சாயத்தார் முடிவு செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஊர் கட்டுப்பாட்டை மீறி அதனை வாங்கியதால் முத்தால்ராஜ் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்களை நற்கலைகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அவ்வாறு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் எவ்வித பொருள்களும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குழந்தைகளுக்கு பால் கூட கொடுக்க மறுப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளை ஆட்டோவில் கூட ஏற்ற மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, முத்தால் ராஜ் குடும்பத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ஊர் நன்மைக்காக கூட்டாக வாங்க நினைத்த நிலத்தை முத்தால்ராஜ் குடும்பத்தினர் வாங்கியதால் அவர்கள் மீது சிறிது வருத்தம் இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கவில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

அவர்கள் வாங்கிய நிலத்துக்கு தங்களது பட்டா நிலம் வழியாக பாதை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகக் கூறும் கிராமத்தினர், அதற்கு சம்மதிக்காததால் இப்படி தங்கள் மீது பொய்ப்புகார் அளித்து அலைக்கழிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 

சற்று விநோதமான இந்தப் பிரச்சனை குறித்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர் உள்ளிட்டோர் கிராமத்துக்குச் சென்று இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருதரப்புக்கும் ஒற்றுமையாக வாழ அறிவுறுத்தி இருப்பதாகக் கூறிய எம்.எல்.ஏ சின்னப்பன், மாவட்ட ஆட்சியரிடம் இந்தப் பிரச்சனை கொண்டுசெல்லப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments