சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணம் தொடர்பாக கோவில் தீட்சிதர்களிடம் விசாரணை

0 310

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிகளை மீறி ஆடம்பரத் திருமணம் நடைபெற்றது தொடர்பாக கோவில் தீட்சிதர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் விதிமுறைகளை மீறி கடந்த 11ந் தேதி சர்ச்சைக்குரிய வகையில் பட்டாசு தொழில் அதிபர் ஒருவரின் இல்லத் திருமணம் நடைபெற்றது.

இது தொடர்பாக கோவில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 14ம் தேதி பா.ஜ.க மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருமணத்திற்கு அனுமதி வழங்கிய கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து புகாரின் பேரில் கோவில் தீட்சிதர்களிடம் சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.இந்த விசாரணையில் புகார் அளித்த பா.ஜ.க பொறுப்பாளர் கோபிநாத், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான பட்டு தீட்சிதர் உள்பட 6 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது தீட்சிதர்கள் சார்பில் திருமணம் நடந்தது தவறுதான் என விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்த விளக்கத்தை பட்டு தீட்சிதர் எழுத்துப்பூர்வமாக டி.எஸ்.பியிடம் எழுதிக் கொடுத்தார்.

இதையடுத்து அடுத்த விசாரணை வரும் 23ம் தேதிக்கு நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோயிலில் திருமணம் நடத்த அனுமதி பெற்றவர்கள், திருமணத்திற்காக அலங்காரம் செய்தவர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக பேசிய பா.ஜ.க பொறுப்பாளர் கோபிநாத், கோவிலில் திருமணம் நடைபெற்ற தவறுக்கு தீட்சிதர்கள் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments