மத்தியப் பிரதேசத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்

0 169

மத்திய பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

தலைநகர் போபாலில் காலை முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்தா, ஹோஷங்காபாத், ரைசென், ராஜ்கார்க் மற்றும் ஷேகூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் விடிஷா, திகம்கர்க், காண்டவ், சாகர், அலிராஜ்பூர், தார், பர்ஹான்பூர், நர்சிங்க்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

போபாலில் இதுவரை 168 செண்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும், 2006ம் ஆண்டில் போபாலில் பெய்த மொத்த மழையளவை விட  தற்போதைய மழைப்பொழிவு வெறும் 0.4 விழுக்காடு தான் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 45 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்களுடன் 75 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருப்பதாகவும், அம்மாநில தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments