அஸ்த்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்திய விமானப்படை

0 274

விண்ணில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

அஸ்த்ரா என்பது, 70 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க பயன்படும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும். மணிக்கு 5 ஆயிரத்து 555 கிலோமீட்டர் வேகத்தில் இலக்கை நோக்கி பாய்ந்து செல்லும் திறன் படைத்தது. 15 கிலோ அளவுக்கு வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, 50 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையைப் பொருத்தி பயன்படுத்துவதற்கு ஏற்ப சுகோய்-30 எம்கேஐ ஜெட் விமானங்களில் மாற்றங்களும் ஹெச்ஏஎல் நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய விமானப் படை, பயன்பாட்டு அடிப்படையில் அஸ்த்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஒடிசா கடலோரப் பகுதியில், Su-30 MKI விமானத்தில் இருந்து அஸ்த்ரா ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது.

இலக்கை ஏவுகணை திட்டமிட்டபடி தாக்கி அழித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரேடார்கள், இஓடிஎஸ் எனப்படும் டிராக்கிங் சிஸ்டங்கள், சென்சார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும், ஏவுகணை மிகத் துல்லியமாக இலக்கை தாக்கியதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதை தொடர்ந்து, டிஆர்டிஓ மற்றும் விமானப் படைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments