பகுஜன் சமாஜ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரசில் இணைந்தனர்

0 236

ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 

பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதற்கான கடிதத்தை, அம்மாநில சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம் திங்கட்கிழமை நள்ளிரவு ஒப்படைத்தனர்.

மொத்தமாக 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் 12 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.

இந்நிலையில் தற்போது காங்கிரசில் இணைந்துள்ள 6 உறுப்பினர்களையும் சேர்த்து ஆதரவு உறுப்பினர்களின் பலம் 119ஆக கூடியுள்ளது.

இதனிடையே காங்கிரசில் இணைந்தது குறித்து 6 எம்.எல்.ஏக்களுள் ஒருவரான ஜோகிந்தர் சிங் அவானா விளக்கமளித்துள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் தங்களது தொகுதிகளின் மேம்பாட்டுக்காக தான் காங்கிரசில் இணைந்ததாகவும், இது ஒருமனதாக எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு எனவும் கூறியுள்ளார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்த பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவை தேர்தலில் ஆதரவளிக்காததும் இம்முடிவுக்கு காரணம் என அவானா கூறினார். வரும் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் கீழ் தான் போட்டியிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments