டிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..! வாகன சோதனை பரிதாபங்கள்

0 925

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, குடிபோதையில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து, குடிபோதை ஆசாமியை விடுவித்ததோடு வாகனத்தையும் முன்னாள் கவுன்சிலரின் மகன் பறித்து சென்ற நிலையில், அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் தலைகவசம் அணிந்து செல்லாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் போலீசார் மற்றும் விதிமீறும் வாகன ஓட்டிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது..!

அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம் செந்துறை சாலையில் காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச்சென்ற தண்டபாணி என்ற நபரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவர் குடிபோதையில் இருந்ததால் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.

அப்போது அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர் ராஜேந்திரன் என்பவரது மகன் செல்வகுமரன் என்பவர், தனது கூட்டாளிகளான வடிவேல், முருகன் ஆகியோருடன் சேர்ந்து உதவி ஆய்வாளர் மாதவராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து உதவி ஆய்வாளர் மாதவராஜ் பிடியில் இருந்த தண்டபாணியை விடுவித்ததோடு, தண்டபாணி ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரனின் மகன் செல்வகுமரன் உள்பட 7 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் காவல்துறையினர். அனைவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் செல்வகுமரனை மட்டும் அவரது தந்தை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலையில் ஒப்படைப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ், நள்ளிரவில் முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று அவரது மகன் செல்வகுமரனை பிடித்து வந்துள்ளார். இதனைத் தடுக்க முயன்ற போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சாதாரண 2 ஆயிரத்து 300 ரூபாய் அபராதத்துக்கு பயந்து போலீசிடம் வம்பு செய்து ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு வாங்கி இருக்கின்றனர் முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரனின் மகனும், அவனது கூட்டாளிகளும். Gfx out

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ் தன்னை துப்பாக்கியால் தாக்கிவிட்டதாக கூறி எம்.ஆர்.ராஜேந்திரன் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு புகார் தெரிவித்தார்

இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் செந்துறையில் கடைகள் அடைக்கப்பட்டு முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் ஆய்வாளர் , காவல் உதவி ஆய்வாளர் புதியவர் என்றும் அரசியல் பிரமுகர் எம்.ஆர். ராஜேந்திரனின் செல்வாக்கு தெரியாமல் நடந்து கொண்டதாகவும், கடுமையான சட்டப்பிரிவுகளை நீக்கிவிட்டு 7 பேரையும் காவல் நிலைய ஜாமீனில் அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்தார்

இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ் விசாரணைக்காக மாவட்டம் காவல் கண்காணிப்பாளரின் முன்பாக ஆஜரானார். வாகன சோதனையின் போது முன்னாள் கவுன்சிலர் மகன் செல்வகுமரன் ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டு வாகனத்தை பறித்துச்செல்லும் சிசிடிவி காட்சி அடங்கிய சிடி ஆதாரத்தை ஒப்படைத்தார்.

இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பலத்த நெருக்கடி கொடுக்கப்படுவது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments