கொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..! தேவை போலீசின் அதிரடி

0 484

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தெருவில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றவரை எச்சரித்தவர், வீட்டு மாடியில் அத்துமீறி நுழைந்து மது அருந்திய கும்பலை கண்டித்தவர் என 24 மணி நேரத்தில் 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2ந்தேதி ஒரு பெண்ணுடைய படுகொலையுடன் தொடங்கிய இந்த பட்டியல், குளத்தூர் சாதி ஆணவ இரட்டை படுகொலை,ஆசிரியர், மீனவர், குலையன்கரிசல் திமுக பிரமுகர், முறப்பநாடு வழக்கறிஞர், என நீண்டு தற்போது 19வது கொலை சம்பவத்தை எட்டிப்பிடித்துள்ளது.

இதில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடந்த 3 கொலை சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சிக்குரியவை, தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலை 3 வது தெருவை சேர்ந்த கப்பல் ஊழியர் முருகேசன் என்பவர், அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவரை மெதுவாக செல்லும்படி எச்சரித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் 7 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுகிழமை மாலை முருகேசனையும், அருகில் பேசிக் கொண்டிருந்த பாவத்துக்காக அவரது நண்பர் விவேக்கையும் கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளது.

புதுக்கேட்டை அடுத்த கூட்டுடன் காட்டில் ஊருக்கு வெளியே தனியாக இருந்த தனது நண்பரின் வீட்டு மாடியில் அத்துமீறி நுழைந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களை கண்டித்ததால் மதுபோதை கும்பல் ஒன்று, லாரி ஓட்டுனர் சொரிமுத்து என்பவரை வெட்டிக் கொலை செய்தது. வீட்டு உரிமையாளர் வள்ளி நாயகம் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டியதால் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பித்தார்..!

அனைத்து கொலை சம்பவங்களிலும் கொலையாளிகள் என சிலர் கைது செய்யப்பட்டாலும் முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் அடைந்து விடுவதால் கொலை சம்பவங்களுக்கான முக்கியமான காரணத்தையும், கொலையாளிகளின் பின்னணியையும் முழுமையாக கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெரும்பாலான காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்கி பிடிப்பதில் காட்டும் ஆர்வத்தை குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் பிடிப்பதில் காட்டுவதில்லை என்கின்றனர் தூத்துக்குடி மக்கள்..!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண்பால கோபாலன் பொறுப்பேற்ற 3 மாதங்களில் தான் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

பெரும்பாலான காவல் நிலையங்களில் உள்ள உளவுப் பிரிவு ஏட்டுகள் உள்ளூரில் உள்ள மணல் கடத்தல், மற்றும் பார் உரிமையாளர்களுடன் ரகசிய கூட்டுவைத்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் இருப்பதால் நகர மற்றும் கிராமப்புறங்களில் 24 மணி நேரமும் மணல் கடத்தலும், மது விற்பனை நடப்பதாகவும், இதனால் மட்டும் 10 கொலைக்களுக்கு மேல் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மணல் கடத்தல், கஞ்சா விற்பனை மற்றும் தண்ணீர் திருடும் கும்பலின் கைகளில் லட்சகணக்கில் பணம் புரள்வதால், எந்த ஒரு குற்றசெயல்களை செய்வதற்கும் அஞ்சுவதில்லை என்று கூறப்படுகின்றது. கஞ்சா புகைக்கு அடிமையாகி இளைஞர்கள் சிலர் கொலை சம்பவங்களில் கூலிப்படையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் பணியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளோ, கடந்த காலத்தை ஒப்பிடும் போது தற்போது கொலை சம்பவங்கள் நார்மலாகவே இருப்பதாக காவல் கண்காணிப்பாளருக்கு தவறான ரிப்போர்ட் அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியும், திறமையும் உள்ள போலீசார் ஏராளம் இருக்கும் நிலையில், உளவு பிரிவில் நீண்ட காலமாக இருந்து கொண்டு சமூக விரோதிகளுக்கு துணை போகும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, சமூக விரோதிகள் மற்றும் கூலிப்படையினரை பட்டியலிட்டு, சென்னை காவல்துறையினர் பாணியில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..

இந்த நிலையில்,  முருகேசன் மற்றும் அவரது நண்பர் விவேக் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டதில்,  தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் செவ்வாய்கிழமை நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து மணிகண்டன் சரணடைந்தது குறித்து வழக்கு விசாரணையில் இருக்கும் தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments