தீவிரவாத தாக்குதல் மிரட்டல் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

0 406

வராத்திரியின் போது, கோவில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக வந்த பயங்கரவாத மிரட்டலை அடுத்து சென்னை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் 5 மாநிலங்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் இந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த விழாவின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரியானா மாநிலம் ரோதக் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு யஷ்பால் மீனா பெயருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அகமது என்பவனது பெயரில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், பால கோட்டில் பயங்கரவாதிகளின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்க தாக்குதல் நடத்தப்படுமென கூறப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவின் போது, குறிப்பாக விழாவின் கடைசி நாளான விஜயதசமியின் போது, இந்தியாவில் உள்ள 12 ரெயில் நிலையங்களையும், முக்கிய இந்து ஆலயங்களையும் குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 8-ந்தேதி தசரா திருவிழா நடைபெறும் போது இலக்கை எட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபாலில் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வந்த இந்த மிரட்டல் கடிதம் பற்றி போலீசார் தீவிர விசாரணையும் ஆய்வும் மேற்கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோதக் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரேந்திர சிங், மும்பை, சென்னை, பெங்களூரு, ரோதக், ரிவாரி, ஹிதர் உள்பட 12 ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பயங்கரவாதிகள் கடிதத்தில் எழுதி உள்ளனர் என்றார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்தாக கூறிய அவர், ரோதக் ரெயில் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதனிடையே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் கடித மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்குள் வருபவர்களை சாதாரண உடை அணிந்த போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க ரெயில்வே போலீசாரை மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே கோவில்களில் கைவரிசை காட்ட போவதாகவும் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகள் அச்சுறுத்தி இருப்பதால் தமிழகம், கர்நாடகம், குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், அரியானா ஆகிய 6 மாநிலங்களில், தசரா திருவிழா நடக்கும் முக்கிய ஆலயங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவில்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு வரும் பக்தர்களை முழுமையாக சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மைசூர் தசரா திருவிழா பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற பதிவாளருக்கு வந்த கடிதம் ஒன்றில், மேற்கு டெல்லியின் மோடி நகரைச் சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நக்பால் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தெற்கில் இருந்து மத்திய பிரதேசம், அங்கிருந்து உத்தரபிரதேசம், டெல்லி என இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதாகவும், செல்போன் சிம்களை மாற்றிக் கொண்டே இருப்பதால் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 30ஆம் தேதி தனது மகனுடன் இணைந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரே நேரத்தில் பல குண்டுகள் வெடிக்க வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments