குப்பைத் தொட்டியாக மாறிய திருமணி முத்தாறு..!

0 152

சேலம் மாநகரின் கழிவுகள் கலப்பால், திருமணிமுத்தாறு தனது புனிதத்தை இழந்து கூவம் போல் மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் முத்துச் சிப்பிகள் கொட்டிக் கிடந்த திருமணிமுத்தாற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் ஒரு செய்தித் தொகுப்பு. 

தருமபுரி மாவட்டம் சேர்வராயன் மலைத் தொடரில் மஞ்சவாடி கணவாயில் உருவாகும் திருமணிமுத்தாறு, சேலம் மற்றும் நாமக்கல் வழியாக பாய்ந்தோடி, நன்செய் இடையார் என்ற ஊரில், காவிரியில் கலக்கிறது. மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அதற்கு பெயர் உண்டு.

ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்ததாகவும், புகழ்பெற்ற செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து இந்த ஆற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டதாகவும் முன்னோர் கூறுவர். நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. தற்போது கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது.

சேலத்தில், உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் ஓடும் திருமணிமுத்தாறு பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பசுமையாக்குகிறது.
கோட்டை மாரியம்மன் அருள்புரியும் ஆறாக திருமணிமுத்தாறு உள்ளது. கோவிலுக்குச் செல்வோர் இந்த ஆற்றில் புனித நீராடி விட்டு மாரியம்மன் மற்றும் கோட்டை அழகிரிநாதரை தரிசிப்பது வழக்கம்.

தமிழ் இலக்கியங்களிலும், சங்ககால நூல்களிலும் இன்றி அமையாத திருமணிமுத்தாறு, தற்போது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. சேலத்தின் ஜீவநதியான திருமணிமுத்தாற்றில்
மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுகள் நாள்தோறும் தங்கு தடையின்றி வந்து சேருகின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேட்டில் மூச்சடைத்துச் சிக்கித் தவிக்கும் அந்த ஆற்றில், கொசுக்கள் பெருகி, பன்றிக் கூட்டமும் ஆக்கிரமித்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டு குப்பைத்தொட்டியாகவும் ஆறு மாற்றப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மன்றாடிய போதும் பலன் கிட்டவில்லை என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றில் கான்கிரீட் போடப்பட்டுள்ளதால், சாக்கடை நீர் நிலத்திற்குள் செல்லாமல், தேங்கி நிற்கும் சூழல் நிலவுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், இனி கழிவுகள் சுத்திகரிக்கப்பட்ட பிறகே ஆற்றில் கலக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்தப் பிரச்சனையில் சேலம் மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து திருமணிமுத்தாற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments