ரயிலில் நகைகள் அடங்கிய பையை தவறவிட்ட பெண் - விரைந்து மீட்டு தந்த ரயில்வே போலீஸார்

0 222

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் கைப்பையுடன் விட்டுச் சென்ற சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் உள்ளிட்டவற்றை மீட்டு, அப்பெண்ணிடம் ரயில்வே போலீஸார் மீண்டும் ஒப்படைத்தனர்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரத்தின் மகள் காயத்ரி, மதுரையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு நேற்று இரவு பயணித்தார். இன்று காலை தாம்பரத்துக்கு ரயில் வந்ததும் அவர் வேகமாக இறங்கிச் சென்றார்.

சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய 14 சவரன் தங்க நகைகள், சேலைகள் ஆகியவை இருந்த தனது கைப்பையை ரயிலிலேயே அவர் மறந்து விட்டுச் சென்றார். இதை சிறிது நேரத்தில் புரிந்து கொண்ட காயத்ரி, ரயில்வே போலீஸின் அவசர உதவி எண் 182ஐ தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார். இதன்பேரில் அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பகுதியான எக்மோர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து எக்மோரில் இருந்த ரயில்வே போலீஸ் துணை ஆய்வாளர் கிருஷ்ணன், கான்ஸ்டபிள் வினோத் குமார் ஆகியோர் விரைந்து செயல்பட்டனர். எக்மோருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.55 மணிக்கு வந்ததும், காயத்ரி பயணித்த ரயில் பெட்டியில் ஏறி, அங்கிருந்த காயத்ரியின் பையை மீட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் காயத்ரி, எக்மோர் வந்து தனது நகைகள் அடங்கிய பையை பெற்றுக் கொண்டார். விரைந்து செயல்பட்டு தனது நகைகள் உள்ளிட்டவற்றை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments