ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை..!

0 526

ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவபிரசாத ராவ் (Kodela Sivaprasada Rao), ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.

ஹைதராபாதில் உள்ள தனது இல்லத்தில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இல்லத்தில் தூக்குப் போட்ட நிலையில் அவர் இன்று காலை குடும்பத்தினரால் மீட்கப்பட்டு, பன்ஜாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு  வென்டிலேட்டர் கருவி வைத்து அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் பிற்பகல் 12.15 மணியளவில் கோடேலா சிவபிரசாத ராவ் உயிரிழந்து விட்டதாகவும் ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், சிவபிரசாத ராவ் மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 72 வயதான கோடேலா சிவபிரசாத ராவ், தெலுங்கு தேசம் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி. ராமா ராவுக்கு மிகவும் நெருக்கமானவர். மருத்துவரான அவர் தெலுங்கு தேசம் கட்சி கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

அவருக்கு சசிகலா என்ற மனைவியும், சிவராம் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அவரின் இளைய மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக கோடேலா சிவபிரசாத ராவ் 6 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் குண்டூர் மாவட்டம் நரசராவ்பேட் (Narasaraopet) தொகுதியில் இருந்து கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டனபள்ளி (Sattenapalli) தொகுதி எம்எல்ஏவாக 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இருந்தார். என்.டி. ராமாராவ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசுகளில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.

ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அம்பாதி ராம்பாபுவிடம் அவர் தோல்வியடைந்தார்.

இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார். ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புடைய உபகரணங்களை திருடிச் சென்றதாக துல்லூர் காவல்நிலையத்தில் அண்மையில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments