மு.க.ஸ்டாலின் அறிவுரை..! நெகிழ்ந்து கண்கலங்கிய வைகோ

0 613

உடல் நலனைப் பேணுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய அறிவுரையால், மதிமுக மாநாட்டின் போது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நெகிழ்ந்து கண்கலங்கினார். 

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு மாலை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதையடுத்து உரை நிகழ்த்திய மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக ஆட்சியில் திட்டமிட்டு தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ரயில்வே, அஞ்சல் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாகக் கூறிய அவர், லேசாக கண் அயர்ந்தால் கூட இந்தியை திணித்து விடுவார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின், வைகோவை பார்த்து உடல் நலனைப் பேணி பாதுகாக்குமாறு அறிவுரை கூறினார். ஒரு சகோதரன் என்கிற முறையில் கண்டித்துக் கூறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். வைகோ ஆரோக்கியமாக இருந்தால் தான் தமிழகம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். ஸ்டாலினின் வார்த்தைகளால் நெகிழ்ந்த வைகோ கண்கலங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், வைகோவின் நண்பருமான யஷ்வந்த் சின்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய வைகோ, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்தியது மதிமுக என தெரிவித்தார். திமுக ஆட்சி நிச்சயம் மலரும் என்றும் அதற்கு தான் துணையாக நிற்பதாகக் கூறிய வைகோ, உண்மையான சமூக நீதி மலர வேண்டும் என்றார்

முன்னதாக பேசிய யஷ்வந்த் சின்ஹா, நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட அறிஞர் அண்ணா தமிழகத்தின் சிறப்புமிக்க முதலமைச்சராக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என அண்ணா முழக்கமிட்டதையும் யஷ்வந்த் சின்ஹா சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments