அண்ணா பிறந்தநாள்: A என்ற எழுத்து இல்லாமல் 100 ஆங்கில வார்த்தைகளை வேகமாக சொல்லி முடித்தவர்..!

0 315

தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவிற்கு இன்று 111வது பிறந்தநாள்.. எளிய குடும்பத்தில் பிறந்து, லட்சக்கணக்கான இளைஞர்களை தமது பேச்சாற்றல்-எழுத்தாற்றலால் கவர்ந்திழுத்து இன உணர்வை பெருக்கெடுக்க வைத்த பெருந்தகை பற்றிய ஒரு செய்தி

அண்ணா... தமிழகமெங்கும் அன்றாடம் மக்களால் உச்சரிக்கப்படும் சொல் இது...

குட்டையான உருவம், கலைந்த தலைமுடி, கசங்கிய வேட்டி- சட்டை, கரகரத்த குரல்..இவைகள் தான் அண்ணாவின் அடையாளங்கள். அவரது எளிய தோற்றமும்,பேச்சும், பண்பும் மக்களின் மனங்களை கவர்ந்தது.

காஞ்சிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா, ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பை முடித்தபின் நகராட்சி எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது பேச்சாற்றல் எழுத்தாற்றலில் அவர் சிறந்து விளங்கினார். தமிழ்- ஆங்கிலம் இருமொழிகளையும் அண்ணா சரளமாக கையாண்டதை நேரில் கண்டவர்கள் வியந்தனர்.

அமெரிக்காவின் ஏல் பல்கலைக் கழகத்திற்கு சென்ற அண்ணாவிடம், ஏ(A) என்கிற எழுத்து இல்லாமல் நூறு ஆங்கில வார்த்தைகளை தொடர்ந்து கூற முடியுமா என மாணவர்கள் கேட்டபோது, ஒன், டூ,த்ரீ என ninety nine என நிறுத்தினார். அடுத்து ஏ ஹண்ட்ரட் என்று கூறுவார் என அவர்கள் எண்ணியபோது, ஜீரோ என்று முடித்த அண்ணாவை மாணவர்கள் உற்சாகத்துடன் கைத்தட்டி பாராட்டினர்.

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவதில் அண்ணா தீவிர ஆர்வம் காட்டி வந்தார். தி.மு.க.வை தொடங்கியபோது, அவரின் அடியொற்றி லட்சக்கணக்கில் இளைஞர்கள் அணிவகுத்து வந்தனர். 1957ல் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில், தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

1962-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, நாடாளுமன்றத்தில் தனது கனல் தெறித்த பேச்சின் மூலம் அகில இந்திய தலைவர்களின் கவனத்தை பெற்றார். நேருவே தனது நேரத்தை அண்ணாவுக்கு அளித்து பேச அனுமதிக்க வேண்டும் என்கிற அளவுக்கு நாடாளுமன்றமே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் அறிஞர் அண்ணா.

1967ல் தி.மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தபோது அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்றார். மதராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார், பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார், சுயமரியாதை திருமணச் சட்டத்தை கொண்டு வந்தார், தமிழறிஞர்களை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு சிலைகளை நிறுவினார். எங்கும் எதிலும் தமிழுக்கு முதலிடம் தந்தார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற தமிழ்ச் சித்தரின் வாக்கை பட்டிதொட்டியெங்கும் பரப்பியவர்.நேரு தொடர்ந்து ராஜாஜி முதல் பெருந்தலைவர் காமராஜர்,இந்திராகாந்தி வரை அனைவரது அன்பையும் பெற்றவர்.

இறுதிக்காலத்தை புற்றுநோயுடன் போரிட்டு அதில் வெல்ல முடியாமல் தோற்றுப்போனார் அண்ணா. 1969 ல் அண்ணா மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

ஜனநாயக நாட்டில் அதிகாரத்தை எளியவர்களும் அடைவதற்கான நவீன அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா. லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தவர் அவர். சாதி மத பேதங்களை கடந்து அவர்களை ஒரு தத்துவத்தின் குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அரசியல் களத்தில் வெற்றி பெறச் செய்து அதிகார நிழலில் அமரவைத்து ஒரு தலைமுறையையே செழுமைப் படுத்திய பெருமை அண்ணாவைச் சாரும். அவர் நிறுவிய இயக்கமும், அவரது பெயரால் இயங்கும் இயக்கமும் இன்று முன்னணிக் கட்சிகளாக விளங்கி வருகின்றன.

சென்னையில் அண்ணா நினைவிடத்தில் இருந்து புறப்படும் ஒருவர் அண்ணாசாலை, அண்ணா சிலை, அண்ணா மேம்பாலம், அண்ணா அறிவாலயம், அண்ணா மருத்துவமனையைக் கடந்து அண்ணா நகருக்கு செல்ல முடியும். அண்ணா பெயரில் பல்கலைக்கழகம், நூற்றாண்டு நூலகம், மேலாண்மை நிலையம், விமான முனையம், உயிரியல் பூங்கா... இப்படி தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் அண்ணாவின் பெயரைத் தாங்கி நிற்பது அவர்மீது மக்கள் வைத்துள்ள அபிமானத்தை பறைசாற்றும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments