விபத்துகளை ஏற்படுத்தும் சேதமடைந்த சாலை..!

0 354

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை முதல் கல்லுவிளை வரை சுமார் 15-கிலோ மீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள், பொதுப்போக்குவரத்து வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து காய்கறிகள் பழங்கள் உள்ளிட்டவை இந்த வழியாகத்தான் கேரளா கொண்டுசெல்லப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சுங்கான்கடை முதல் கல்லுவிளை வரை சுமார் 15-கிலோ தூரம் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த 15 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு மட்டும் வாகனங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். 

ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சாலையில் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சாலையின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்க முற்பட்டபோது நமது அழைப்புகளை அவர்கள் ஏற்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments