புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரே... மண்டபத்தில் தர்ம அடி

0 558

சென்னை மாதவரத்தில் அரசு மருத்துவர் என பொய் சொல்லி, வசதியான வீட்டுப் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர், வரவேற்பு நிகழ்ச்சியின் போது, தனது குடிகார மாமனால் வசமாக சிக்கினார்.

வில்லிவாக்கம் வெங்கடேசன் நகரில் வசித்து வந்தவர் கார்த்திக். அன்றாடம் காலை வெள்ளை அங்கியையும், ஸ்டெத்தஸ்கோப்பையும் எடுத்துக் கொண்டு தனது காரில் புறப்பட்டுச் செல்வதை கார்த்திக் வாடிக்கையாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அரசுப் பணி என்பதைக் குறிக்கும் ஜி என்ற எழுத்து, அவரது சொகுசு காரில் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்து, கார்த்திக்கை ஒரு அரசு மருத்துவர் என்று அப்பகுதி மக்கள் நினைத்தனர்.

அதேபகுதியில் உள்ள வசதியான ஒரு குடும்பத்தினரும் அவ்வாறே எண்ணினர். கார்த்திக்கின் நடத்தை பிடித்துப் போகவே, தங்கள் வீட்டுப் பெண்ணை கார்த்திக்கிற்கு மணம் முடித்துக் கொடுக்க முடிவு செய்தனர். இதுதொடர்பாக பேசுவதற்காக கார்த்திக்கை நேரில் சந்தித்து அவரது குடும்ப பின்புலம் பற்றி விசாரித்தனர். அப்போது தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறிய கார்த்திக், உறவினர்கள் மட்டுமே இருப்பதாகவும், அரசு மருத்துவமனை ஒன்றில் தாம் பணிபுரிவதாகவும் சொன்னதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திக்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. வியாழக்கிழமை அன்று ரெட்டேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது.

அனைத்தும் நல்லபடியாக முடிந்து விட்டது என்று, கார்த்திக்கும், அவருக்கு பெண் கொடுத்தோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த போது, வரவேற்பு நிகழ்ச்சிக்கு மது அருந்தி விட்டு சலம்பிய படி வந்த கார்த்திக்கின் மாமாவால் பூகம்பம் வெடித்தது. வரதட்சனை பணம் தொடர்பாக பெண் வீட்டாரிடம் கார்த்திக்கின் மாமா வாக்குவாதம் செய்த போது, மதுபோதையின் உச்சத்தில் இருந்த அவர் உண்மையை போட்டுடைத்தார்.

கார்த்திக்கே ஒரு பிச்சைக்காரன் என்று அவர் கூறியதைக் கேட்டு பெண் வீட்டார் அதிர்ந்து போயினர். என்னவென்று விசாரிக்கத் தொடங்கிய போது கார்த்திக்கின் வாய் குளறத் தொடங்கியது. இதனால், ஒட்டுமொத்த கூட்டமும் கார்த்திக்கை நோக்கி படையெடுத்தது. அவரைப் புரட்டி எடுத்த பெண் வீட்டார், மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர்.

கார்த்திக்கைக் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட போது, அவரது சொந்த ஊர் கோவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு திருமணத்திற்கு வந்த பெரும்பாலானோர் போலிகள் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது.

8 மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் வந்த கார்த்திக், அங்கு தன்னை அரசு மருத்துவர் போல் காட்டிக் கொண்டு வசதியான வீட்டுப் பெண்ணை மணம் முடிக்க திட்டம் போட்டதும் அம்பலமானது. எனவே கார்த்திக் இதற்கு முன்பு வேறு யாரையாவது ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா அல்லது வேறு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளாரா என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெளித்தோற்றத்தையும், வசதி மிகுந்த வாழ்க்கையும் கருத்தில் கொண்டு சற்றும் யோசிக்காமல் எடுத்த ஒரு முடிவு, ஒரு பெண்ணின் வாழ்வை காவு வாங்கி இருப்பது தான் இச்சம்பவம் உணர்த்தும் பாடம்.

இதனிடையே கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் உண்மையான பெயர் அதுவல்ல என்பதையும், அவரது பெயர் சாம்சுந்தர் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். கழிவறையில் வழுக்கி விழ இருந்த போது, இந்த உண்மையை மோசடி நபர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சாம்சுந்தருக்கு உடந்தையாக இருந்த வசந்தா என்ற பெண்ணையும், அவரது கணவர் ரவி மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments