கி.வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கிருஷ்ணபகவான் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கிருஷ்ண பகவானை அவதூறாகவும் அவ மரியாதையாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாகக் கூறப்படுகிறது.
இது இந்து மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் வீரமணி மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தச்சநல்லூரைச் சேர்ந்த சீதாபதி தாஸ் என்பவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வன சுந்தர் உத்தரவின் பேரில் அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments