சிவகங்கை சாமியாரின் ஜீவசமாதி முயற்சி தோல்வி...!

0 17719

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்து இரவு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய இருளப்ப சாமியார் என்ற முதியவர், விடிந்ததும் ஜீவசமாதி முடிவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையைச் சேர்ந்த 71 வயதான முதியவர் இருளப்ப சாமி. இவர் மனைவி மகன், மகள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சாமியாராக உள்ளூரில் பெயரெடுத்த அவர் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்தார். இதனால் அவரைத் தேடி வந்த ஏராளமான பக்தர்கள் ஆசிபெற்றுச் சென்றனர்.

இந்நிலையில் தேர்வு செய்த இடத்தில் இருளப்ப சாமியார் ஜீவசமாதியை அடைய குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. அவரை காண்பதற்காக ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த சாமியார் இருளப்பசாமி நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 6 மணிக்குள் தனது உயிர் பிரிந்துவிடும் என்று அறிவித்தார். பக்தி பாடல்கள் ஒலிக்க விடிய விடிய பூஜைகள் நடத்தப்பட்டு இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் நிலைமையை கண்காணித்து வந்தனர். மருத்துவர் பரிசோதனையில் சாமியாரின் உடல்நிலை சீராக இருப்பது தெரிய வந்தது. ஜீவசமாதிக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், சமாதி முடிவை ஒத்தி வைப்பதாக இன்று காலை அறிவித்தார் இருளப்ப சாமி.

இதையடுத்து இரவெல்லாம் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கலைந்து சென்றனர். அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மக்களை கலைந்துபோக அறிவுறுத்தினர். அதே இடத்தில் விடிய விடிய கண்விழித்த களைப்பில் சாமியார் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments