நாய்க்கு பயந்து ஊருக்கே ரெஸ்ட் கொடுத்த கரடி..! 8 மணி நேர திக் திக்.!

0 2953

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடிக்கு பயந்து ஊரே வீட்டை பூட்டிக் கொண்டு அச்சத்தில் உறைந்து கிடக்க , அந்த கரடியோ தெரு நாய்களுக்கு பயந்து 8 மணி நேரமாக மரத்தில் ஏறி பதுங்கி இருந்துவிட்டு, விட்டால் போதும் என்று தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது. பயம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பதை விளக்குகிறது இந்த செய்தி...

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த மணிமுத்தாறு மலையாடிவார கிராமத்திற்குள் அண்மை காலமாக காட்டு விலங்குகள் புகுந்து ஆடு மாடுகளை இரைக்காக அடித்து இழுத்து செல்வது அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை 5 க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்துக் கொன்றது. இந்த நிலையில் புதன் கிழமை இரவு 8 மணி அளவில் மலையடிவாரப் பகுதியில் இருந்து ஓடி வந்த கரடி ஒன்று ஊருக்குள் புகுந்தது.

தெருவில் கரடி வருவதை பார்த்த மக்கள் பயத்தில் ஓடிச்சென்று அவரவர் வீட்டை பூட்டிக் கொண்டு பதுங்கினர். கரடி குறித்து செல்போன் மூலம் வனத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக ஊருக்குள் வந்த கரடியை கண்ட பயத்தில் தெரு நாய்கள் அதீத சத்தத்தில் இடைவிடாது குரைத்ததால், கரடி பயந்து ஓட தொடங்கியது, இதையடுத்து கரடியை தெரு நாய்கள் தெம்பாக விரட்ட... கரடியோ அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறி பதுங்கிக் கொண்டது.

மரத்துக்கு கீழே நின்று சில நாய்கள் குறைத்தபடி நின்றதால் கரடியை விரட்ட வந்த வனத்துறையினர் மரத்தின் மேல் பகுதியில் கரடி பதுங்கி இருப்பதை டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்டு பிடித்தனர்.

கரடிக்கு பயந்து ஊரு சனம் முழுவதும் வீட்டிற்குள் முடங்கி கிடக்க , நாய்களுக்கு பயந்து கரடியார் மரத்தில் பதுங்கி இருக்க , விரட்ட வந்த வனத்துறையினரோ கரடி நம்மை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் தயங்கி நிற்க..! நேரம் நீண்டு கொண்டே போனது. ஆள் நடமாட்டம் இருப்பதால் கரடி மரத்தில் இருந்து இறங்க அஞ்சுவதாக தெரிவித்த வனத்துறையினர், அனைவரும் மறைவான இடத்தில் பதுங்கி கொண்டால் கரடி இறங்கி ஓடிவிடும் என்று முடிவுக்கு வந்தனர்.

அதன்படி யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவித்த வனத்துறையினர் தெரு நாய்களை விரட்டிவிட்டு, மறைவான பகுதியில் ஒளிந்து கொண்டனர். அதிகாலை 4 மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட கரடி மரத்தில் இருந்து குதித்து விட்டால் போதும் என்று மணிமுத்தாறு வனபகுதிக்குள் ஓடி மறைந்தது.

பயம் என்ற ஒற்றை சொல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments