கடத்தி விற்கப்பட்ட குழந்தை - அமெரிக்க இளைஞராக திரும்பினார்

0 803

20 வருடங்களுக்கு முன்பு கடத்தி விற்கப்பட்ட சென்னை சிறுவன், அமெரிக்க இளைஞராக தாயகம் திரும்பி வந்து பெற்றோரை சந்தித்து நெகிழ வைத்தார். தமிழ் பேச தெரியாத மகன், ஆங்கிலம் தெரியாத பெற்றோருடன், வார்த்தைகளின்றி கண்களால் பாசத்தை வெளிப்படுத்திய, சினிமாவை விஞ்சும் திருப்பங்கள் நிறைந்த நிகழ்வு பற்றிய தொகுப்பு இது.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் நாகேஷ்வரராவ். இவரது மகன் சுபாஷ் ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும் போது கடத்தப்பட்டதாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் கடத்தல்காரன் ஒருவன் சிக்கினான். அவன் சுபாஷை கடத்தி ஒரு சிறுவர் இல்லத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றதும், அவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து, குழந்தை இல்லாத அமெரிக்க தம்பதிக்கு விற்றிருப்பதும், அங்கு அவன் அவினாஷ் என்கிற பெயரில் வளர்ந்து வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது.

மகன் உயிருடன் இருப்பதை கேள்விப்பட்ட தாயார் சிவகாமி, கடந்த மாதம் முதல்முறையாக செல்போன் வீடியோ காலில் பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பிய சுபாஷ் பெற்றோரை நேரில் சந்தித்தார். தமிழ் தெரியாத மகனும், ஆங்கிலம் தெரியாத பெற்றோரும் சுபாஷிடம் பேச முடியாமல், கண்களால் பேசியது நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. தாய் சிவகாமி சுபாஷுக்கு உணவு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

சுபாஷ் தங்கள் குழந்தை என்றாலும் அவரை வளர்த்த பெற்றோரும் பாசத்துடன் இருப்பார்கள் என்பதால் அவர் அமெரிக்காவில் இருப்பதுதான் சரி என்று தாய் சிவகாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடப்பது அனைத்தும் ஒரு கனவு போலிருப்பதாகவும், மொழி பிரச்சனையாக உள்ளதாக கூறிய சுபாஷ், தமிழ் கற்று பெற்றோருடன் உரையாட முயற்சிப்பேன் என்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments