ராசிபுரத்தில் உள்ள ஆற்றில் சாய ஆலைக் கழிவுகள் கலப்பு

0 238

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் கலக்கப்பட்ட சாய ஆலைக் கழிவுகளால் பொங்கி எழும் நுரை, பொதுமக்களை திணறடித்து வருகிறது. 

தருமபுரி மாவட்டம் சேர்வராயன் மலைத் தொடரில் மஞ்சவாடி கணவாயில் உருவாகும் திருமணிமுத்தாறு, சேலம் மற்றும் நாமக்கல் வழியாக பாய்ந்தோடி, நன்செய் இடையார் என்ற ஊரில், காவிரியில் கலக்கிறது.

அண்மையில் அந்த மாவட்டங்களில் பரவலாகப் பெய்த கனமழையால், திருமணிமுத்தாற்றில் அதிக அளவில் நீர் செல்கிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு, சட்டவிரோதமாக சாய ஆலைகள் வைத்திருப்போர், ரசாயன சாயக் கழிவுகளை ஆற்றில் கலந்து விட்டுள்ளனர்.

இதன் காரணமாக, ராசிபுரம் அருகே மதியம்பட்டி கிராமத்தை கடந்து செல்லும் திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி எழுகிறது. 

மல்லசமுத்திரம் - மதியம்பட்டி சாலை தரைப்பாலத்தை நீர் கடக்கும் போது, நுரை சாலையில் தேங்கி விடுகிறது. பனிப்பாறைகள் போல், சாலை ஓரம் தேங்கி நிற்கும் நுரையால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

திருமணிமுத்தாறு நீரை நம்பி, அந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். மதியம்பட்டியில் 500 ஏக்கர் விளை நிலங்கள், திருமணிமுத்தாறால் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது நல்ல மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வரும் வேளையில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது, பொதுமக்களையும் விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சாயக் கழிவு கலந்த நீரால், விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதுடன், நிலத்தடி நீரும் நஞ்சாகும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நல்ல மழை பெய்து ஒவ்வொரு முறையும் திருமணிமுத்தாற்றில் அதிக அளவில் நீர் பொங்கும் போதெல்லாம், நுரையும் சேர்ந்து பொங்குவதாக குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், சட்டவிரோத சாய ஆலைகளை ஒழிப்பதுடன், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments