கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்

0 659

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 38 பேர் மீட்கப்பட்ட நிலையில் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குடிகாடு மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 41 பேர் அரியலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள தீவான ராமநல்லூரில் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள ஒரு படகில் சென்றனர்.

அவர்கள் அனைவரும் மீண்டும் திரும்பும் போது படகின் மோட்டார் (புரொஃபல்லர்) பழுதானதையடுத்து படகு அதன் போக்கில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, படகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு தடுமாறியதால், படகு கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த 41 பேரும் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த கும்பகோணம், பாபநாசம் கோட்ட தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் 16 பேரை மீட்டு பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சம்பவம் நிகழ்ந்த குடிகாடு கிராமத்திற்கு வந்து கொட்டும் மழையிலும் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலும், அரியலூர் மாவட்டத்திலும் சேர்த்து 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு மூதாட்டி உள்பட மூவரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களைத் தேடும் பணியில் உள்ளுர் மக்களுடன் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 3 பேரை தேடும் பணிகளை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். இதனிடையே படகின் ஒட்டுநரான மேல்ராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த கண்ணனை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர்.

படகு விபத்துக்குள்ளான போது தனது உயிரையும் பொருட்படுத்தாமல், தண்ணீரில் விழுந்தவர்களில் பெரும்பாலானோரை படகு ஓட்டுநர் காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் படகு ஓட்டுநரை காவல்துறையினர் அழைத்து சென்றதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் ஆறுதல் கூற வந்த அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து படகு ஓட்டுநரை காவல்துறையினர் விடுவித்ததால், பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து மதனத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் தேடும் பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments