வறண்ட தாமிரபரணியில் பாண்டியர் கால மண்டபம்..! ஆற்றுக்குள் அதிசயம்

0 923

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறு நீரின்றி வறண்ட நிலையில் ஆற்றுக்குள் புதைத்திருந்த 13 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியனின் அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மண்டபம் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்பாக்கி வந்த வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கி விடுவதால் கடைமடை பகுதியில் தாமிரபரணி வறண்ட நதியாகி விட்டது..!

பாபநாசம் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தாலும் தாமிரபரணியில் போதுமான நீர் திறக்கப்படவில்லை.

இதனால் கடை மடைப்பகுதிக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதுமான நீர் வரத்து இல்லை என்று விவசாயிகளும் பொதுமக்கள் ஏங்கி தவிக்கும் நிலையில் வறண்ட தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கி இருந்த பாண்டியர் கால அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தண்ணீர் நிரம்ப கிடக்கும் போது ஆற்றுக்குள் கோவில் மண்டபம் ஒன்று உள்ளது என்று பல ஆண்டுகளாக அந்த பகுதி பெரியவர்கள் கூறுவதுண்டு. அது உண்மைதான் என்று தற்போதைய தலைமுறை அதனை அதிசயத்துடன் தோண்டி பார்க்க தொடங்கி இருக்கின்றது

ஆற்றுக்குள் புதைந்து இருப்பது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என்று விவரிக்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

பண்டைய தாமிரபரணி நதிகரை நாகரீகத்தை கண்டறிய தொல்லியல் துறை இங்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க ஆற்றுக்குள் புதைந்து இருப்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவேல் செழிய பாண்டியனால் கட்டப்பட்ட வெற்றிவேல் அம்மன் கோவில் மண்டபம் என்றும் கூறப்படுகிறது.

மதுரை கீழடியைப் போன்று பண்டைய தமிழர்களின் நாகரீகத்தை அறிந்து கொள்ள தாமிரபரணி ஆற்றில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு மண்டபம் முழுவதுமாக வெளிக் கொண்டு வரப்படும் நிலையில் தாமிரபரணி நாகரீகத்தின் சிறப்பை முழுவதுமாக அறிந்து கொள்ள இயலும்..! என்ற கருத்தும் அங்கு நிலவுகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடபோகும் தாமிரபரணி நதி வழியில் உள்ள பாண்டியர் கால மண்டபத்தை கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்வது என்பது சாத்தியமா ? என்பதே இப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments