ரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது பொன்மாணிக்கவேல் குழு

0 1508

37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை அருகே களவாடப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலானாய்வு குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதனை படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த கல்லிடைகுறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. பாண்டியர் காலத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மானிக்கப்பட்ட இந்த கோவிலில் உற்சவ மூர்த்தியாக நடராஜர் சிலையை வைத்து பூஜைகள் நடந்து வந்தது.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை 6 ந்தேதி இந்த கோவிலின் இரும்புக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நடராஜர் , சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகள் கொள்ளையடித்தனர். 1984 ஆம் ஆண்டுவரை வழக்கை விசாரித்தும் துப்பு துலக்க இயலாமல் வழக்கை மூடிவிட்டது காவல்துறை.

உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்த சிலை திருட்டு வழக்கை தூசி தட்டி விசாரணைக்கு எடுத்தனர்.

வரலாற்று நூல்கள், பட்டயங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் அந்த கோவிலில் 1958ல் எடுக்கப்பட்ட புகைபடங்களை கொண்டு சிலைகளை கண்டுபிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். இதில் இங்கு களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அடிலைடில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த சிலை இந்தியாவில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்ட சிலை என்பதை தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி ஆய்வு செய்து உறுதிபடுத்திய சான்று கடிதத்துடன் ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்துக்கு சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் அனுப்பி வைத்தார். மேலும் திருட்டு பொருளை 17 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் வைத்திருப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டி தங்களிடம் சிலையை ஒப்படைக்க கோரி கடிதம் எழுதினார்.

இதையடுத்து சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டாலும், அதனை விமானம் மூலம் இந்தியாவிற்கு எடுத்து வர தமிழக அரசின் அனுமதிக்காக சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் 300 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணை தூதர்கள் டாக்டர் காண்டேன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உதவியால் நடராஜர் சிலையை அருங்காட்சியகத்தின் நிர்வாகி ராபின்சன் தனது சொந்த செலவில் இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்க சம்மத்தித்தார்.

அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான நடராஜர் சிலை, சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை கொண்டு வரப்படும் சிலை வருகிற 13 ந்தேதி சென்னை வந்தடையும் என்று தெரிவித்துள்ள சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், உயர் நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு இல்லையெனில் இந்த சிலை மீண்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்காது என்றும் மீதமுள்ள சிலைகளையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பூஜைக்காக குலசேகரமுடையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

காவல்துறையில் எண்ணற்ற வசதிகளை வைத்துக் கொண்டு முக்கிய வழக்குகளில் துப்பு துலக்க இயலாமல் திணறிவரும் சில போலீசாருக்கு மத்தியில் தன்னலமில்லாமல் தனிப்படையை வழி நடத்தி சென்று பாரம்பரியம் மிக்க நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சாமர்த்தியமாக மீட்டு சாதித்து காட்டி இருக்கும், பொன்மாணிக்கவேலுவின் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினர் பாராட்டுக்கு உரியவர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments