திடீரென புறப்பட்டுச் சென்ற அமெரிக்க போர்க் கப்பல்

0 681

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த அதிவிரைவு போர் கப்பலான யு.எஸ்.எஸ். கேப்ரியல் கிஃபோர்ட்ஸ் புதிய தாக்குதல் ரக ஏவுகணை மற்றும் ஆளில்லா ஹெலிகாப்டர் ஆகியவற்றுடன் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சாண்டியாகோவை விட்டு இம்மாதம் தொடக்கத்தில் திடீரென புறப்பட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தக் கப்பலில் இருக்கும் ஏவுகணையை ரேடார் சாதனத்தால் கண்டுபிடிப்பது கடினமாகும். சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டதாகும் இந்தக் கப்பல். அதேபோல் கப்பலில் இருக்கும் MQ-8ஃB பயர் ஸ்கெளட்  ஹெலிகாப்டரும் தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடிய ஹெலிகாப்டர் ஆகும்.

தென்சீன கடல் பகுதியில் சீனா பெரும் சவாலாக இருக்கிறது. பசிபிக் கடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் போர் கப்பல்கள், விமானங்கள், ஏவுகணைகளை சீனா நிலை நிறுத்தி வருகிறது. இதுபோன்ற அவசரமான சூழ்நிலைகளை துரித கதியில் கையாள இந்த கப்பல் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதேபோல் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அக்கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடுவதால் அந்நாடுகளுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது.

இதில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தென்சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், அப்பகுதி வழியே தனது போர்க் கப்பல்களையும் தொடர்ந்து அமெரிக்கா அனுப்பி வருகிறது. எனினும், யு.எஸ்.எஸ். கேப்ரியல் கிஃபோர்ட்ஸ் போர்க் கப்பல் எங்கு புறப்பட்டுச் சென்றது என்பது தெரியவில்லை.

அமெரிக்க கடற்படையும் அது எங்கு சென்றுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சிங்கப்பூரில் அமெரிக்காவின் USS Montgomery போர் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூருக்கு யு.எஸ்.எஸ். கேப்ரியல் கிபோர்ட்ஸ் சென்று கொண்டிருக்கலாம் என யூகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சீனாவை பதற்றத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments