அண்ணா பல்கலை.. உயரிய அந்தஸ்து பெறுவதில் சிக்கல்

0 300

நிதிப்பங்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாநில அரசு ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் Institutions of Eminence எனும் உயரிய அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு 'Institutions Of Eminence' என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2017-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த திட்டத்தின்படி 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு சிறப்பு அந்தஸ்து பெறும் உயர்கல்வி நிறுவனங்கள் கல்வி முறை மற்றும் நிர்வாகம் முழுவதும் தன்னாட்சி அதிகாரம் உடையவையாக இருக்கும். மேலும், இந்த கல்வி நிறுவனங்களுக்கு தலா ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசும், மாநில அரசும் வழங்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசின் அண்ணா பல்கலைக்கழகம், மத்திய அரசின் IIT Madras, தனியார் கல்வி நிறுவனங்களான வேலூர் VIT பல்கலைக்கழகம், கோவை அமிர்தா விஷ்வ வித்ய பீடம் ஆகியவை Institutions of Eminence எனப்படும் மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள் என்கிற சிறப்பு அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழக அரசின் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு 750 கோடி ரூபாயும், மாநில அரசு 250 கோடி ரூபாயும் வழங்க வேண்டும். இதே போல் மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராசுக்கு மத்திய அரசே 1000 கோடி ரூபாயை வழங்கும்.

மேலும் 'Institutions Of Eminence' அந்தஸ்தை பெற்ற கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டங்களை வரையறுத்தல், புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை பல்கலைக் கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் இன்றி முழுவதும் தன்னிச்சையாக செய்து கொள்ள முடியும்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நிதி பங்கீடு விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டிய 250 கோடி ரூபாய் தொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாமதிக்காமல் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது, ‘‘அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதியை அளிப்பது தொடர்பான, மத்திய அரசின் கடிதம் மீது ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் நிதியை பங்கிட்டுக்கொள்வது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்’’என்றும் விளக்கம் அளித்தார்.

அதேநேரம் அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் நிலை என்னவாகும் என கேள்வி எழுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற்றால் தன்னிச்சை அதிகாரம் கொண்ட தனி கல்வி நிறுவனமாகிவிடும். அந்தசூழலில் தற்போது அதன் கீழ் இயங்கி வரும் சுமார் 500 கல்லூரிகளை நிர்வகிப்பது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments