ஓகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்து

0 312

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்து நடந்த விபத்தில், பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் புதுச்சேரியை சேர்ந்த பெண் அடித்து செல்லப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குடகு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வரும் புதுச்சேரியை சேர்ந்த மனோ என்பவர் தனது மனைவி அஞ்சலாட்சி, மகள் மோசிகா ஆகியோருடன் நேற்று இரவு ஒகேனக்கலுக்கு வந்துள்ளார்.

அங்கு இரவு தங்கிய அவர்கள் இன்று காலை பரிசலில் பயணிக்க சென்றுள்ளனர். அவர்களை ஒகேனக்கலை சேர்ந்த பரிசல் ஓட்டியான 37 வயதாகும் மனோகரன் என்பவர் ஒகேனக்கலில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முசல்மருவு என்ற இடத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கி பரிசலில் அழைத்து சென்றுள்ளார்.

வெள்ளப்பெருக்கினால் அவர்கள் நீலகிரி தோப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் பரிசலில் இருந்த அனைவரும் நீரில் விழுந்தனர். அவர்களுள் 51 வயதான அஞ்சலாட்சி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மனோ மற்றும் அவரது மகள், பரிசல் ஓட்டி மனோகரன் ஆகியோர் மரக்கிளைகளை பிடித்து தப்பித்துள்ளனர்.

மனோ மற்றும் அவரது மகள் ஆகியோரை பரிசல் ஓட்டி மனோகரன் மீட்டு கரை சேர்த்தார். இந்நிலையில் தடையை மீறி ஓகேனக்கலில் பரிசல் இயக்கிய மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments