வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு..!

0 975

ந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது...

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்று ஆட்சிக்கு வந்த து. அந்த கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறுவதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பாக குண்டூர் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் தலை தூக்கின. அந்த மாவட்டத்தின் பொனுகுபாடு கிராமத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் சாலையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் சுவர் கட்டி அடைத்த சம்பவம் செய்தியாக வெளியானது.

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வீடுகளை விட்டு துரத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 150 பேருக்கு குண்டூரில் உள்ள கட்சியின் அலுவலத்தில் பாதுகாப்பு முகாம் அமைத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, அத்மகூர் கிராமத்தில் இருந்து விரட்டப்பட்ட 127 பேரை மீண்டும் அவர்களின் வீடுகளில் குடியமர்த்தும் வகையில் குண்டூரில் இருந்து அத்மகூர் வரை சலோ அத்மகூர் என்ற பேரணியை இன்று நடத்த திட்டமிட்டு இருந்தது.இதற்காக அந்த கட்சியின் தொண்டர்கள் ஆந்திரா முழுவதும் இருந்து குண்டூருக்கு வரத் தொடங்கினார்.   

இதனிடையே தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டியாக சலோ அத்மகூர் என்ற பேரணியை நடத்தப் போவதாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் அறிவித்தது. இதனால் பதற்றநிலை ஏற்பட்டதை அடுத்து, பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதித்தும், குண்டூர், அனந்தபூர் மாவட்டங்களிலும், நரசரவ்பேட்டா, சட்டனபள்ளி, பல்நாடு, குராஜாலா ஆகிய வட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் அமராவதியில் உள்ள தமது வீட்டில் இருந்து குண்டூருக்கு செல்ல வெளியே முற்றத்திற்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியின் அராஜகம் அதிகரித்துள்ளது என்றார். எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலை கண்டித்து திட்டமிட்டபடி பேரணி நடைபெற்றே தீருமென அவர் கூறினார்.

இதன் பின்னர் காரில் ஏறி அவர் புறப்பட தயாரான தருணத்தில், வீட்டின் வெளி வாசலில் உள்ள பெரிய இரும்பு கதவுகளை போலீசார் அடைத்தனர். இதனை கண்டதும் அங்கு இருந்த தொண்டர்கள், கதவை திறக்க முயன்றதால், போலீசார், அதனை திறக்கவிடாமல் தடுத்து கயிறு கட்டி அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சந்திரபாபு நாயுடு அரைமணி நேரம் காரிலேயே இருந்தார். அப்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து, காரில் இருந்து இறங்கிய அவர், இரவு 8 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.

மேலும் தமது 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இதுபோன்ற அடக்குமுறையை கண்டதில்லை என்ற அவர், இந்த நாள் ஆந்திர அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என்றார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் அவர்களது வீடுகளிலேயே மீள் குடிஅமர்த்தவே தெலுங்கு தேசம் கட்சி விரும்புவதாக அவர் கூறினார். இது எப்படி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என அவர் கேள்வி எழுப்பினார்.   

இதனிடையே அமராவதி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி . கவுதம் சவாங், பல்நாடு வட்டாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். சந்திரபாபு நாயுடுவால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால் தான் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக அவர் கூறினார். அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். 

இதனிடையே சந்திரபாபு நாயுடுவின் மகன் நராலோகேஷ், விஜயவாடா எம்.பி கேசினியேனி நானி, முன்னாள் அமைச்சர் கோலபள்ளி சூர்ய ராவ், தெலுங்கு தேசம் இளைஞர் அணி தலைவர் தேவிநேனி அவினாஷ், மேல்சபை உறுப்பினர் தினேஷ் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இதனால் பதற்றநிலை உருவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments