கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

0 502

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. கே.ஆர்.எஸ். அணைக்கு விநாடிக்கு 41,000 கன அடி வீதமும், கபினி அணைக்கு நொடிக்கு 17,000 கன அடி வீதமும் நீர் வந்து கொண்டிருக்கிறது. காலை 8 மணி நிலவரப்படி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 38,000 கன அடி வீதமும், கபினியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக விநாடிக்கு 50,000 கன அடி வீதம் காவிரியில் நீர் பாய்கிறது.

ஏற்கெனவே திறக்கப்பட்டதையும் சேர்த்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 70,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலிலும் இதே அளவு நீர் பாய்வதால், அங்கு குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.740 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 94.65 டி.எம்.சி.யாக இருக்கிறது.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 76 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குளித்தலை அருகே உள்ள மாயனூர்  கதவணை வழியாக முக்கொம்பு சென்றடைகிறது. தற்போது மாயனூர் கதவணைக்கு, நீர் வரத்து வினாடிக்கு 76 ஆயிரத்து 100 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 75 மதகுகள் வழியாக வினாடிக்கு  74 ஆயிரத்து 500 கன அடி நீர் காவிரியிலும், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கனஅடியும், புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் 400 கனஅடியும், தென்கரை பாசன வாய்க்காலில் 800 கனஅடி என, வினாடிக்கு மொத்தம் 76 ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உச்ச நீர்மட்டம் 17 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 11 புள்ளி 81 அடியாகவும், நீர் இருப்பு 377 புள்ளி 89 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments