விதிமீறல்கள் லட்சகணக்கில், வழக்கு பதிவு சில ஆயிரங்களில்

0 273

சென்னை அண்ணா நகரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை சிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கேமராக்கள் மூலம் விதியை மீறுபவர்கள் லட்சகணக்கில் சிக்க, வழக்கு பதிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் ஒருபக்கம் விபத்துகள் அதிகரிக்கிறது. மறுபக்கம் விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமான விதிமீறல் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்கும் போதுமான போலீசார் இல்லை. இதனால் மேலை நாடுகளில் உள்ளது போல், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை தானியங்கி கேமராக்கள் மூலம் அடையாளம் காட்ட, அவர்களது வீட்டிற்கே அபராத ரசீது அனுப்பி வைக்கும் திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தினர்.

முதற்கட்டமாக சென்னை அண்ணா நகரில் 5 முக்கிய சந்திப்புகளில், கடந்த ஜூலை மாதம் 58 ANPR ((Automatic Number Plate Recognition cameras)) எனும் இந்த நவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

24 மணி நேரமும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை வாகன எண்ணுடன் கேமிராக்கள் படம் பிடித்து வருகின்றன.

அண்ணா நகர் ரவுண்டானா அருகே இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, இந்த 58 கேமராக்களில் இருந்தும் பதிவாகும் விதி மீறும் வாகனங்கள் தொடர்பாக தகவல்கள் உடனுக்குடன் வருகிறது. 

நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் வரை விதிகளை மீறும் வாகனங்கள் இந்த கேமராவால் பதிவு செய்யப்படுவதாகவும், ஒரு நாளில் அதிகபட்சமாக 63 விதிமீறல்களை பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

கடந்த  2 மாதத்தில் மட்டும் சுமார் 28 லட்சம் விதிமீறல்கள் பதிவாகியுள்ளது. ஆனால், அவற்றில் 8 ஆயிரத்து 300 வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே அபராத ரசீது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேமரா லட்சக்கணக்கில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டுப்பிடித்து காட்ட, வாகன எண்ணை வைத்து வாகன உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அபராத ரசீது அனுப்பவதற்குள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக கூறுகின்றனர் போக்குவரத்து போலீசார்.

இதனால் தேசிய தகவல் ஆணையத்துடன் இந்த தொழில் நுட்பத்தை இணைத்துவிட்டால் விதிமீறும் வாகன ஓட்டிகளின் முகவரியோடு குறிப்பிட்டு அபராத ரசீதை இந்த தொழில் நுட்பம் வழங்கும்.

போக்குவரத்து போலீசார் இந்த பரிந்துரையை செய்தும் தேசிய தகவல் ஆணையம் காலந்தாழ்த்துவதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் மொத்தம் 78 வாகன விதிமீறல் குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த தானியங்கி கேமராவில் சிக்னலை மீறி செல்வது, எல்லை கோடுகளை கடந்து நிற்பது மற்றும் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவது ஆகிய 3 விதி மீறல்களை மட்டும் அடையாளம் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தலைகவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களையெல்லம் அடையாளம் காட்டும் வகையில் அமைக்கப்பட்டால் இந்த பணிகள் இன்னும் இடியாப்ப சிக்கலாகும் என கூறும் காவல் துறையினர் தேசிய தகவல் ஆணையத்துடன் இந்த தொழில் நுட்பத்தை இணைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments