கல்லூரி மாணவிகளின் ஓணம் கொண்டாட்டம்

0 445

பாரம்பரிய நடனம், வண்ண பூக்கோலம், உணவுத் திருவிழா என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுடன், ஓணம் புடவை அணிந்து வந்த கல்லூரி மாணவிகளின் திருவோண கொண்டாட்டத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

image

மாமன்னன் மகாபலி,கேரள மக்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருவதாக ஐதீகம். இதையே அம்மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஓணம் மலையாள மக்களின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

image

அந்த வகையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஜி எஸ் எஸ் ஜெயின் கல்லூரியில் வழக்கம் போல் இந்த ஆண்டும் அக்கல்லூரி மாணவியர் கேரள பாரம்பரிய புடவையான 'கசவு' எனப்படும் வெள்ளைநிற சேலை அணிந்து வந்து கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றனர். மலையாள நாட்டுப்புற பாடலுக்கு மாணவிகள், வட்டமாக நின்று கைகளைத் தட்டியபடி திருவாதிரை நடனம் ஆடி அசத்தினர்.

முகம் முழுக்க பச்சை சாயம் பூசிய மாணவி ஒருவர், பல வித பாவனைகளுடன் நிகழ்த்திக் காட்டிய 'பச்சை வேஷம்' எனப்படும் கதகளி நடனம் கூடியிருந்தவர்களை கைதட்டி ரசிக்க செய்தது.

image

மாணவிகளோடு கல்லூரி பேராசிரியைகளும் கலை நிகழ்ச்சிகளை உற்சாகமாக கண்டு ரசித்தனர். சாதி,மத, இன பேதங்கள் அற்ற சமத்துவ மனநிலையை உருவாக்கும் வகையில் இந்தக் கொண்டாட்டங்கள் அமைந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.


பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் இக்கல்லூரியில் படிப்பதால் கேரள மக்களின் உணவு மற்றும் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று புரசைவாக்கம் கேரள சமாஜம் பள்ளியிலும் ஓணம் சார்ந்த நிகழ்ச்சிகளும், உணவு திருவிழாக்களும் நடத்தப்பட்டன.

image

அண்டை மாநில பண்டிகையாக இருந்தாலும் கேரள மக்களின் கலாசாரத்தை போற்றும் வகையில் நம் மாநிலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது பாராட்டத்தக்கது... இதேபோல அனைத்து மாநில பாரம்பரிய நிகழ்ச்சிகளும், எல்லா மாநில மக்களாலும் கொண்டாடப்பட்டால் ஒற்றுமை தழைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments