பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதி சென்னையில் கைது

0 116

இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்ட ஜமாத்-உல்-முஜாகிதீன் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டான்.

ஜமாத்-உல்-முஜாகிதீன் ஆஃப் பங்களாதேஷ் என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நபர் சென்னையில் பதுங்கியிருப்பதாக, மேற்குவங்க போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அம்மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு குழு போலீசாரால் தேடப்பட்டு வந்த அந்த நபர் நீலாங்கரையில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை விரைந்தனர். நீலாங்கரையில் வாடகை வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஷேக் அசதுல்லா என்கிற ராஜா என்ற நபரை சென்னை போலீசார் உதவியுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் பர்துவான் பகுதியைச் சேர்ந்த அசதுல்லா கடந்த 10 மாதங்களாக நீலாங்கரையில் வாடகை வீட்டில் தங்கி கட்டட வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 29-ம் தேதி, ஜமாத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இஜாஸ் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்து விசாரித்த போது தான், அசதுல்லா குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஜேஎம்பி என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் ஜமாத்-உல்-முஜாகிதீன் ஆஃப் பங்களாதேஷ் மூலம், தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் பயங்கர தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக அம்மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி அசதுல்லா மீது, இந்திய அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிடுதல், பயங்கர ஆயுதங்களை பதுக்குதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதி அசதுல்லாவை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொல்கத்தா கொண்டு செல்கின்றனர். ஜேஎம்பி தீவிரவாத அமைப்பானது, கடந்த 2012-ஆம் ஆண்டில் மேற்கு வங்கம் பர்துவானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும், 2013-ல் பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டு வெடிப்பிலும் தொடர்புடையது.

பின்னர், 2018-ல் அதே புத்தகயாவில் தலாய்லாமாவை கொல்லும் நோக்கத்துடன் 2 இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி அசதுல்லாவிற்கு, இந்த தீவிரவாத தாக்குதல்களில் உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments