கனரக வாகனங்கள் விற்பனையில் சரிவு எதிரொலி

0 440

கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், விற்பனை சரிவு காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தனது ஆலைகளில் நடப்பு மாதம் வேலையில்லா நாட்களை கடைபிடிப்பதாக அறிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறை மந்தகதியில் இருப்பதால், பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை குறைத்து ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றன. அந்த வகையில், தேசிய பங்கு சந்தை நிறுவனத்திற்கு அசோக் லேலண்ட் நிறுவனம் வேலையில்லா நாட்கள் குறித்து தகவல் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் செயலாளர் ராமநாதன் கொடுத்துள்ள விவர அறிக்கையில், சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்கள் வேலையில்லா நாட்களாகவும், ஓசூரிலுள்ள இரண்டு ஆலைகளில் மொத்தம் 3 நாட்கள் மற்றும் சிபிபிஎஸ் ஆலையில் 5 நாட்களும், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார், மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா ஆலைகளில் தலா 10 நாட்களும், உத்தரகாண்ட் மாநிலம் பன்ட்நகர் ஆலையில் அதிகபட்சமாக 18 நாட்களும் செப்டம்பர் மாதம் வேலையில்லா நாட்களாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் ஆலையில் செப்டம்பர் மாதம் ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் கட்டாய விடுப்பு கொடுக்கப்படுவதாக தெரிவித்து இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விற்பனை 47 சதவீதம் சரிவடைந்து, 9231 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments