பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வால் நீர்தேக்கும் பகுதியில் பாலம் மூழ்கும் நிலை

0 270

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி சாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நீர்தேக்கும் பகுதியில் உள்ள 30 அடி உயர பாலம் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணை இந்த மாதம் 3 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பில்லூர் அணையில் இருந்து உபரி நீரானது சீரான இடைவெளியில் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் பவானியின் உபநதிகளான மாயாறு, கந்தையாறு போன்ற ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவில் வந்துகொண்டிருக்கிறது. இதனால் 115 அடி மொத்த உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 2 நாட்களில் 5 அடி உயர்ந்து 96 அடியாக உள்ளது. மேலும் 20 அடிக்கு தண்ணீர் தேக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பவானி அணையின் நீர்தேக்கும் பகுதியில் உள்ள 30 அடி உயர்மட்ட பாலம் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் லிங்காபுரம் மற்றும் காந்தவயல் ஆகிய 2 கிராமங்களை இணைக்கும் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் என்றும் காந்தவயல், ஆலூர், உளியூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாற்று வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments