சட்டத்தை மதித்தே ஆக வேண்டும் என்று நிதின் கட்கரி வலியுறுத்தல்

0 269

மோட்டார் வாகன சட்டத்திருத்தம் காரணமாக, போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதத் தொகை மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து நாடு முழுவதும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தினார்.

குருகிராமில் 15 ஆயிரம் ரூபாய் பெறாத இரு சக்கர வாகனத்திற்காக ஒருவருக்கு 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சரக்கு லாரி ஒட்டுனர் ஒருவர் 59 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. ஒடிசாவில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மக்கள் சட்டத்திற்கு பயந்துதான் ஆக வேண்டும் என்றும், சட்டத்தை மதிக்காவிட்டால் அப்புறம் சட்டம்தான் எதற்கு என்றும் திருப்பி கேட்டார்.

ஆண்டுதோறும் விபத்துகளில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறிய நிதின் கட்கரி, இதில் 65 சதவீதம் பேர் 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களே என்றும் தெரிவித்தார். இந்த மரணங்களை தடுக்க வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆட்டோ ஓட்டுனர் குடிபோதையில் ஓட்டியதாகவும் அவரிடம் உரிமம் இல்லை என்றும் சுட்டிக்காட்டிய நிதின் கட்கரி, அவரால் விபத்து நேரிட்டால் யார் பொறுப்பேற்பது என்றார்.

யாரும் அபராதம் கட்டத் தேவையில்லாமல் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நிதின் கட்கரி கூறினார். முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க பரிசீலித்து வருவதாக கூறினார். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படாது என்றும் கட்காரி விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments