ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

0 412

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சில் முறைகேடு வழக்கும் உள்ளது.

தற்போது சிபிஐ காவலில் இருக்கும் ப சிதம்பரம், ஐ என் எக்ஸ் முறைகேடு வழக்கிலும், ஏர் செல் மேக்சிஸ் வழக்கிலும் முன் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்து இருந்தார்.

இதில் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்ட நிலையில், ஏர் செல் மேக்சிஸ் வழக்கின் முன் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஓ பி சைனி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் இந்த வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கப்படுகிறது. இருவரும் வெளிநாடு செல்வதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில், சாட்சிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை அமைப்புகளுக்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இரு விசாரணை அமைப்புகளும் வாதிடுவதைத் தவிர்த்து, வழக்கு பதிவு செய்ததில் இருந்து விசாரணை நடத்தாமல், தேதி கேட்டுத் தாமதித்துக்கொண்டே வந்தீர்கள். இந்த வழக்கில் இரு விசாரணை அமைப்புகளும் தொடக்கத்தில் இருந்தே மிகுந்த தாமதம் செய்தார்கள்.

இப்போது சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரும் எந்தவிதமான அரசுப் பதவியிலும் இல்லை என்பதால், இதேபோன்ற குற்றத்தை இனி செய்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதி மாறன் மற்றவர்கள் ரூ.749 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தயாநிதிமாறன் கைது செய்யப்படவில்லை. ஆனால், ரூ.749 கோடியோடு ஒப்பிடும்போது, குற்றம்சாட்டப்பட்ட சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்ததாக குறிப்பிடும் ரூ.1.13 கோடி என்பது அற்பமான தொகை.

ஒரே மாதிரியான குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு இடையே விசாரணை அமைப்புகள் வேறுபாடு காட்டி நடத்தக்கூடாது. இது சட்டத்துக்கு விரோதமானதாகும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சொந்த ஜாமீனும், பிறநபர் ஜாமீனாகவும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments