சீனாவிலிருந்து இந்தியா வரும் அமெரிக்க நிறுவனங்கள்...

0 928

மெரிக்க அதிபரின் அதிரடி வரி விதிப்பால் 200க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டுவரும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சர்வதேச சட்ட ஆலோசகர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் அதிரடி வரி விதிப்பால் 200க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர ஆர்வம் காட்டுவதாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான வணிக மற்றும் வர்த்தக உறவுகளை ஊக்குவிக்கும் அமைப்பான அமெரிக்க - இந்திய சமயோசித கூட்டமைப்பு எனப்படும். எஸ்.ஐ.எஸ்.பி.எஃப். தலைவர் முகேஷ் ஆகி(Mukesh Aghi) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலீட்டாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக தங்கள் அமைப்பிடம் அமெரிக்க நிறுவனங்கள் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் முகேஷ் ஆகி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயர ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர்களுக்கு தமிழ்நாடு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சந்தீப் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான அமெரிக்க அதிபரின் வர்த்தகப் போரால் சீனாவில் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதில் சிக்கல்களும் வணிகம் செய்வதற்கான கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வேறு இடத்துக்கு மாறிச் செல்ல முடிவு செய்துள்ளன.

மேலும் அமெரிக்காவிலும் ட்ரம்ப் சில பொருட்கள் மீது விதித்துள்ள வரிகள் செப்டம்பர் முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில்அமெரிக்காவையும் தவிர்த்துவிட்டு வேறு நாடுகளில் முதலீடுகளை மாற்றுவதால் அதிக வரியை தவிர்க்கலாம் என்று அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அந்த நிறுவனங்களை இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் கொண்டுவர என்னென்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் வாரிய உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் அமெரிக்க தூதருமான ஃபிராங்க் விஸ்னரிடம் முகேஷ் ஆகி வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள விஸ்னர், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை எளிதாக்குவதற்கும், நிலங்களை கையகப்படுத்துவதற்கும், நம்பகமான வரி முறைகளை உருவாக்குவதற்கும், முதலீட்டை முறையாக பயன்படுத்தக்கூடிய நிதித் துறையை நிறுவுவதற்கும் தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கூறினார். முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலங்களை எளிமையாக வாங்குவதற்கும் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதற்கும் மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் விஸ்னர் கூறியுள்ளார். பணியாளர்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனும் அவசியம் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். உலக அளவிலான குளோபல் சட்ட நிறுவனத்தின் சர்வதேச ஆலோசகராகவும் தற்போது விஸ்னர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments