அண்ணா பல்கலைக் கழகம் 42 ஆம் ஆண்டு தொடக்கம்..!

0 222

ண்ணா பல்கலைக் கழகம் துவங்கப்பட்டு, இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பள்ளிக்கூடமாகத் தொடங்கி பல்கலைக்கழகமாக உருவாகிய 225 ஆண்டுகால சரித்திரத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

225 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கும் அண்ணா பல்கலைக்கழகம், முதன்முதலில் 1794-ல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், டாப்பிங் என்கிற பொறியியலாளரின் முயற்சியால் ஒரு 'சர்வேயிங்' பள்ளியாக துவங்கப்பட்டது.

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவிட ஆங்கிலேயர்களை நியமிப்பதைக் காட்டிலும் உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளிப்பது சுலபமானது, சிக்கனமானது என்று கருதி இந்தக் கல்வி நிறுவனம் அப்போது தொடங்கப்பட்டது.

பின்னர் அந்த சர்வேயிங் பள்ளி, சிவில் பொறியியல் கல்லூரியாக 1858 இல் சேப்பாக்கத்தின் கல்சா மகாலில் இயங்க ஆரம்பித்தது. அப்போது அக்கல்லூரி மாணவர்களுக்கு மெட்ராஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மூலம் வேதியியல் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

அணை கட்டுவது, பாலங்கள், கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கியபோது சிவில் படிப்போடு சேர்த்து மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கல்வியையும் கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இது மாற்றப்பட்டது. ஆனாலும், இரண்டின் தியரி பாடங்களும் ஒன்றாகவே இருந்துள்ளது , செய்முறையில் மட்டுமே மாறுபாடுகள் இருந்துள்ளது.

பின்னர் இடப்பற்றாக்குறையால்,கல்சா மஹாலிருந்து காடுகள் நிறைந்திருந்த கிண்டி பகுதிக்கு 1920 இல் கல்லூரி நகர்ந்திருந்தது. அப்பொழுது தான் 'கிண்டி பொறியியல் கல்லூரி' என்கிற பெயர் ஏற்பட்டது.1930-களில் மின்சாரத் துறை உலக அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் முழு நேரப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது.

அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியாக இருந்த இக் கல்லூரிக்கு சென்று வர 5B என்ற ஒரே ஒரு பேருந்து மட்டுமே இருந்துள்ளது.

1940களில் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட சமயத்தில் கல்லூரி வளாகத்தில் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டுள்ளன மேலும் தீவிபத்து ஏற்பட்டால் பாதுகாப்பிற்கென குளங்கள் ஏற்படுத்தப்பட்டது. அப்படி எழுந்த குளங்கள் தான் இன்று நீச்சல் குளமாகி இருக்கிறது.

1859-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைந்த கல்லூரியாக செயல்பட்டுவந்த கிண்டி பொறியியல் கல்லூரி, நிர்வாக காரணத்திற்காக 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என தனித் தனியாக பிரிக்கப்பட்டது.

225 வருடங்களுக்கு முன்பு 8 மாணவர்களோடு, சிவில் என்ற ஒரே துறையை மட்டும் கொண்டு துவங்கப்பட்ட பள்ளி இன்று 550 க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுடன், 101பல்வேறு தொழில்நுட்ப துறைகளோடு செயல்பட்டு வருவதோடு, லட்சக்கணக்கான பொறியாளர்களையும் உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் பணியாற்றாத நாடே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது.

இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பொறியியல் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் பிரபலமாகவும் திகழ்கின்றனர்.. 

இந்திய அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏழாவது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருவதாக கூறுகிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா...

சென்னையின் மத்தியில் வீற்றிருந்தாலும் பெருநகரத்தின் பரபரப்போ சலசலப்போ புழுதியோ படியாமல் கம்பீரமான அமைதியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகம் திகழ்கிறது. 180 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புடைய இப்பகுதிக்குள் அடியெடுத்து வைத்த சில நிமிடங்களில் பசுமை செறிந்த அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் உணர்வு ஏற்படுகிறது.

வகுப்பறை வளாகங்களும் நிர்வாகக் கட்டிடங்களும், ஆய்வகங்களும் மரங்களிடையே ஒளிந்திருக்கின்றன. அண்ணா பல்கலைக் கழகம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உரு மாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments