நீட் தேர்வு பயிற்சி தொடங்குவது எப்போது?

0 234

தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி மையங்களில், வகுப்புகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் மிக சொற்ப அளவிலேயே தேர்ச்சி பெற்றிருந்தனர். சிபிஎஸ்இ மாணவர்களே அதிக அளவில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

எனவே அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் 412 இலவச பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் இரண்டு ஆண்டுகளாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த இலவச பயிற்சி மையங்களின் மூலமாக 2018 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளை சேர்ந்த மூன்று பேருக்கும் என மொத்தம் ஏழு மாணாக்கர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தது. நடப்பு ஆண்டில் ஒரே ஒரு மாணவருக்கு மட்டும் அரசு கல்லூரியில் இடம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளதாக ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு 8 மாத காலமே உள்ள நிலையில், இன்னும் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட 412 மையங்களில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை உருவாகியுள்ளது.

தனியார் மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, பதினொன்றாம் வகுப்பு முதலே பயிற்சி அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்திற்கு பயிற்சி பெற்ற பின்னர் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களோடு, முழுமையாக எட்டு மாதம் கூட பயிற்சி பெறாத அரசு பள்ளி மாணவர்கள் எப்படி போட்டி போட முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் கல்வியாளர்கள்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 412 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நீட் தேர்வுக்காக பயிற்சிகள் வழங்கப்படுவது பாராட்டத்தக்க செயல் என்றாலும், அதனை காலம் தாழ்த்தி வழங்குவதால் அதனுடைய பலன் மாணவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments