பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கு மத்தியில் இந்திய வீரர்களை மீட்ட பெண் விமானி

0 531

பாய்ந்து வந்த ஏவுகணைகள், தோட்டாக்களுக்கு மத்தியில்  கார்கில் போரில் காயமடைந்த இந்திய வீரர்களை ஹெலிகாப்டர் உதவியோடு மீட்ட இந்தியாவின் முதல் பெண் போர் விமானி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

1994-ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாக சேர்ந்தவர் குஞ்சன் சக்சேனா. 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, கண்ணில் பட்ட இந்திய போர் விமானங்களை நோக்கி பாகிஸ்தான் படையினர் தோட்டாக்களையும், ஏவுகணைகளையும் செலுத்திக் கொண்டிருந்த ஆபத்தான இடத்துக்கு பணிக்கு அனுப்பப்பட்டார். சக போர் விமானி வித்யா ராஜனுடன் ஆளுக்கு ஒரு சீட்டா ரக ஹெலிகாப்டரில் பதற்றமான பகுதிக்கு சென்ற குஞ்சன் சக்சேனா, தன்னை நோக்கி பாய்ந்து வரும் தோட்டாக்கள், ஏவுகணைகளை கண்டு அஞ்சாமல் உயிரைத் துச்சமெனக் கருதி துணிச்சலோடு ஹெலிகாப்டரை செலுத்தினார்.

image

அங்கு காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இந்திய வீரர்களை மீட்டுக் கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தார். அவரது வீர தீர செயல்களை சித்தரிக்கும் வகையில் குஞ்சன் சக்ஸேனா ; த கார்கில் கேர்ள் என்ற படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் படத்துக்கான முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்திய வீரர்களின் உயிரைக் காத்த அந்தத் தருணம் விவரிக்க இயலாத பெருமிதத்தைத் தந்ததாக 2012-ல் அளித்த பேட்டியில் கூறியுள்ள குஞ்சன் சக்சேனா, தற்போது போர் விமானியாக விண்ணைத் தொடும் கனவோடு பல பெண்கள் இந்திய விமானப்படையில் நிரந்தரப் பணியில் சேர்ந்ததற்கு தான் முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments